சாலையோரம் குப்பை கொட்டப்படுவதை கண்டித்து நகராட்சி லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்


சாலையோரம் குப்பை கொட்டப்படுவதை கண்டித்து நகராட்சி லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 10 Nov 2017 4:30 AM IST (Updated: 10 Nov 2017 1:56 AM IST)
t-max-icont-min-icon

மணப்பாறை அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரம் குப்பை கொட்டப்படுவதை கண்டித்து நகராட்சிக்கு சொந்தமான லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மணப்பாறை,

மணப்பாறை நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இந்த வார்டு பகுதிகளில் இருந்து பெறப்படும் குப்பைகள் அனைத்தும் திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் செவலூர் பிரிவு சாலை அருகே உள்ள நகராட்சி குப்பைக் கிடங்கில் கொட்டப்படுவது வழக்கம். ஆரம்பத்தில் குறைந்த அளவு மக்கள் தொகை மற்றும் குடியிருப்பு இருந்த போது குறைந்த அளவே குப்பைகள் சேரும். அதற்கு போதுமான இடமாக நகராட்சி குப்பைக் கிடங்கு இருந்தது.

ஆனால், தற்போது அதிக அளவிலான குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகள், இறைச்சி கடைகள் என பன்மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் குப்பைக் கிடங்கு ஆரம்பத்தில் எந்த அளவு இருந்ததோ அதே அளவு தான் தற்போதும் உள்ளது.

இதுமட்டுமின்றி தற்போது அமைந்துள்ள குப்பை கிடங்கின் பின் பகுதியில் மான்பூண்டி ஆறு செல்கிறது. இந்த குப்பை கிடங்கில், குப்பைகள் மலை போல் கொட்டப்பட்டுள்ளதால் ஆற்றிலும் பாதி அளவு குப்பைகள் நிரம்பி காணப்படுகிறது. இதனால் மழை காலங்களில் ஆற்றில் தண்ணீர் சீராக செல்ல முடியாத நிலை இருப்பதால் அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு மற்றும் கடைகளில் மழைநீர் புகுந்து விடும் நிலையும் உள்ளது.

இதுபோன்று பல்வேறு இடர்பாடுகள் உள்ள குப்பைக் கிடங்கை மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் விடுத்த கோரிக்கையின் பேரில் கே.பெரியபட்டி என்ற இடத்தில் குப்பைக் கிடங்கு அமைப்பதற்கு சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் இடம் வாங்கப்பட்டது. ஆனால் அந்த இடத்தில் குப்பைக் கிடங்கு அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த இடத்திலும் குப்பைக் கிடங்கு ஏற்படுத்தப்படவில்லை.

இந்நிலையில் திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் செயல்பட்டு வரும் நகராட்சி குப்பைக் கிடங்கில் குப்பைகள் மலைபோல் தேங்கி இருக்கும் நிலையில் தற்போது சேமிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் குப்பைக் கிடங்கிற்கு வெளியில் கொட்டப்பட்டு வருகிறது. ஏற்கனவே குப்பைக்கிடங்கில் இருந்து துர்நாற்றம் வீசி வரும் நிலையில், கொசுக்கள், புழுக்கள் உற்பத்தி ஆகி அப்பகுதி மக்கள் காய்ச்சல், தொற்றுநோய் என பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது குப்பைக்கிடங்கின் வெளியில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்படுவதை அறிந்த அந்த பகுதி மக்கள் நேற்று காலை குப்பைகளை கொட்ட வந்த நகராட்சி லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் நகராட்சி பணியாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் குப்பையை கொட்டாமலேயே லாரியை எடுத்துச் சென்றனர்.

பின்னர் அந்த பகுதி மக்கள் நகராட்சி அலுவலகத்திற்கு சென்று இதுபற்றி நகராட்சி ஆணையர்(பொறுப்பு) மனோகரிடம் கோரிக்கை விடுத்தனர். அப்போது வெளியில் கிடக்கும் குப்பைகளை பொக்லைன் எந்திரத்தை வைத்து முழுவதுமாக குப்பை கிடங்கிற்குள் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தூய்மை இந்தியா திட்டம் என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மணப்பாறை நகராட்சியில் குப்பைகளை சாலையோரம் கொட்டி அசுத்தம் செய்யும் நிலை பொதுமக்களை முகம் சுழிக்க வைத்துள்ளது. ஆகவே நகராட்சி குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்றி தொற்றுநோய் மற்றும் காய்ச்சல் பாதிப்பில் இருந்து மக்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story