குடிநீர் வினியோகம் செய்யும் தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம்


குடிநீர் வினியோகம் செய்யும் தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம்
x
தினத்தந்தி 10 Nov 2017 4:15 AM IST (Updated: 10 Nov 2017 2:41 AM IST)
t-max-icont-min-icon

திருமுருகன்பூண்டியில் குடிநீர் வினியோகம் செய்யும் தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்டு வேறோரு குடிநீர் கேன் வினியோகஸ்தர்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த தாசில்தார் காரை சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அனுப்பர்பாளையம்,

திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டியில் கடந்த 1 ஆண்டாக மெட்ரோ பன்மாநில கூட்டுறவு வீட்டுவசதி சொசைட்டி லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் ரூ.1050 செலுத்தி உறுப்பினர்களாக சேருபவர்களுக்கு வாரத்திற்கு 2 கேன் குடிநீர் இலவசமாக வழங்குவதாக அந்த நிறுவனம் சார்பில் துண்டு பிரசுரங்கள் மூலம் வினியோகம் செய்யப்பட்டது.

மேலும் 2 கேன்களுக்கு மேல் குடிநீர் தேவைப்படுபவர்களுக்கு ஒரு கேன் குடிநீர் ரூ.20-க்கு வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் குறைந்த விலையிலும், இலவசமாகவும் குடிநீர் கேன் வழங்குவதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி திருப்பூர் மாவட்ட குடிநீர் கேன் வினியோகஸ்தர் சங்கம் சார்பில் நேற்றுகாலை திருமுருகன் பூண்டியில் உள்ள சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்டனர். குடிநீர் கேன் சங்கத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் குடிநீர் கேன்களுடன் சரக்கு ஆட்டோக்களை அந்த நிறுவனம் அருகே நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தாசில்தார் கார் சிறைபிடிப்பு

அப்போது அந்த வழியாக வந்த அவினாசி தாசில்தார் விவேகானந்தனை காருடன் சிறைபிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இந்த பிரச்சினை குறித்து அவரிடம் முறையிட்டனர். ஆனால் அவர் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் பேசி கொள்ளுமாறும், இதுதொடர்பாக மனு கொடுக்குமாறும் கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

பின்னர் அவர்கள் அனைவரும் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்குள் சென்று அந்த நிறுவனத்தின் தலைவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்து கலைந்து சென்ற குடிநீர் கேன் வினியோகஸ்தர்கள் அவினாசி தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று மனு கொடுத்தனர்.

ஏமாற்று வேலை

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

குடிநீர் கேன் வினியோக தொழிலை நம்பி திருப்பூர் சுற்று வட்டாரத்தில் சுமார் 8 ஆயிரம் தொழிலாளர்கள் இந்த தொழிலை செய்து வருகிறோம். தற்போது மெட்ரோ நிறுவனம் சார்பில் ரூ.20-க்கு குடிநீரை நீரப்பிய கேன் விற்பனை செய்கின்றனர். மேலும் ரூ.1050 முன்பணம் வாங்கி கொண்டு வாரத்திற்கு 2 குடிநீர் கேன்கள் இலவசமாக வழங்குவதாக விளம்பரம் செய்து வருகின்றனர். இதனால் எங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. நாங்கள் 2 சக்கரம் மற்றும் 4 சக்கர வாகனங்கள் மற்றும் குடிநீர் கேன்களுக்கு பணத்தை முதலீடு செய்துள்ளோம்.

பொதுமக்களிடம் முன்பணம் வாங்காமல் அத்தியாவசியமான குடிநீரை சேவை மனப்பான்மையோடு வினியோகம் செய்து வருகிறோம். ஆனால் இந்த நிறுவனம் விளம்பரப்படுத்தும் விலைக்கு குடிநீர் வழங்க முடியாது. இது மக்களை ஏமாற்றும் வேலையாகும். இதுபோன்ற நிறுவனங்களின் செயல் எங்களையும், எங்கள் தொழிலையும் நசுக்குவது போல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தலையிட்டு இந்த பிரச்சினைக்கு உடனடியாக உரிய தீர்வு காண வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Related Tags :
Next Story