அம்பத்தூர் பாடியில் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு


அம்பத்தூர் பாடியில் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 10 Nov 2017 4:00 AM IST (Updated: 10 Nov 2017 2:57 AM IST)
t-max-icont-min-icon

பாடி குமரன்நகர் மெயின் ரோட்டில் அம்மா உணவகம் எதிரில் நேற்று மாலை திடீரென சாலையின் ஒருபகுதி பூமிக்குள் இறங்கி பெரிய பள்ளம் ஏற்பட்டது.

அம்பத்தூர், 

சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட பாடியில், குமரன்நகர் மெயின் ரோட்டில் அம்மா உணவகம் எதிரில் நேற்று மாலை திடீரென சாலையின் ஒருபகுதி பூமிக்குள் இறங்கி பெரிய பள்ளம் ஏற்பட்டது. அசம்பாவிதங்களை தடுக்க உடனடியாக அந்த பள்ளத்தை சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த சென்னை மாநகராட்சி அதிகாரிகள், சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை பார்வையிட்டனர். பின்னர் அந்த பள்ளத்தை தோண்டி, அதில் சிமெண்டு, ஜல்லிக்கல் கலவையைகொட்டி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த சாலையை பயன்படுத்திதான் அம்பத்தூர், முகப்பேர், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மினி பஸ் சென்று வருகிறது. சாலையில் ஏற்பட்ட பள்ளத்தால் அந்த வழியாக மினி பஸ், லாரி உள்ளிட்ட வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இருசக்கர வாகனங்கள் மட்டும் சென்று வருகின்றன.

கடந்த வருடம்தான் இந்த சாலை போடப்பட்டதாகவும், தரமற்ற முறையில் போடப்பட்டதால் அடிக்கடி இதுபோல் சாலையில் பள்ளம் ஏற்படுவதாகவும் அந்த பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டினர். 

Next Story