காரிமங்கலம் அருகே சீரான குடிநீர் வழங்கக்கோரி பெண்கள் சாலை மறியல்


காரிமங்கலம் அருகே சீரான குடிநீர் வழங்கக்கோரி பெண்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 10 Nov 2017 2:22 PM IST (Updated: 10 Nov 2017 2:22 PM IST)
t-max-icont-min-icon

சீரான குடிநீர் வழங்கக்கோரி பெண்கள் சாலை மறியலில் காரிமங்கலம்- பாலக்கோடு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

காரிமங்கலம்,

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள சொன்னம்பட்டி கிராமத்தில் 1,500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைகளுக்காக 2 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத்தொட்டி ஒன்றும், 10 சிறுமின்விசைப்பம்பு தொட்டிகள், ஆழ்துளை கிணறு ஒன்றும் ஊராட்சி நிர்வாகத்தால் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர ஒகேனக்கல் குடிநீர் 2 நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் பொருத்தப்பட்ட மின் மோட்டார்கள், சிறுவிசை மின்பம்பு தொட்டிகளில் மின்மோட்டார்கள் பழுதடைந்ததால் இந்த கிராமத்திற்கு சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் தனி அலுவலரிடம் பொதுமக்கள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த சொன்னம்பட்டி கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று காலை சீரான குடிநீர் வழங்கக்கோரி அனுமந்தபுரத்தில் காலிக்குடங்களுடன் காரிமங்கலம்- பாலக்கோடு சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காரிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சிகளின் தனி அலுவலர் வடிவேலன், ஒன்றிய திட்டங்களின் மேலாளர் கந்தசாமி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அந்தோணிசாமி, லாவண்யா, வருவாய் ஆய்வாளர் சக்திவேல், கிராம நிர்வாக அலுவலர் சீனிவாசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது சீரான குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மறியலில் ஈடுபட்டிருந்த பெண்களிடம் அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து பெண்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த திடீர் சாலை மறியல் காரணமாக காரிமங்கலம்- பாலக்கோடு சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

Next Story