ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையை மறு சீராய்வு செய்ய வேண்டும்; விக்கிரமராஜா பேட்டி


ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையை மறு சீராய்வு செய்ய வேண்டும்; விக்கிரமராஜா பேட்டி
x
தினத்தந்தி 11 Nov 2017 4:30 AM IST (Updated: 11 Nov 2017 1:05 AM IST)
t-max-icont-min-icon

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையை மறு சீரமைப்பு செய்யவேண்டும் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறினார்.

ஈரோடு,

ஈரோடு மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அலுவலக கட்டிடம் ஈரோடு கருங்கல்பாளையம் கண்ணையன் வீதியில் கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட தலைவர் ஆர்.எம்.தேவராஜா தலைமை தாங்கினார். பொருளாளர் கே.ராஜகோபால், செயலாளர் ரா.க.சண்முகவேல், மாநில செய்தி தொடர்பாளர் பி.பாண்டியராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:–

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8–ந் தேதி ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார். இந்த அறிவிப்பால் வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதில் இருந்து அவர்கள் மீள்வதற்குள் மத்திய அரசு ஜி.எஸ்.டி. (சரக்கு மற்றும் சேவை வரி) வரியை அமல்படுத்தியது.

இந்த வரி அமல்படுத்தி ஒரு ஆண்டு ஆகியும் இதன் விதிமுறைகள் குறித்து வியாபாரிகளுக்கு சரியாக தெரியவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால் ஆன்–லைனில் பார்த்துக்கொள்ளுங்கள் என்கிறார்கள். ஜி.எஸ்.டி. வரி கணக்கை ஒருநாள் காட்டாவிட்டால் ரூ.200 அபராதம் விதித்தனர். எங்கள் அமைப்பு சார்பில் கோரிக்கை வைத்த பின்னர் அபராதம் ரூ.50 ஆக குறைக்கப்பட்டது. மேலும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையை மறு சீராய்வு செய்யவேண்டும். ஜி.எஸ்.டி. விரி விதிப்பை எதிர்த்தும், உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தை எளிமையாக்க வலியுறுத்தியும் அடுத்த மாதம் (டிசம்பர்) 3–ந்தேதி ஈரோட்டில் மாநாடு நடக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் இளைஞர் அணி செயலாளர் லாரன்ஸ் ரமேஷ், மாநகர துணை தலைவர் கார்த்திகேயன், மாவட்ட துணை தலைவர்கள் உதயம் பி.செல்வம், பொன்.நாராயணன், சரவணன், ஜவஹர், சின்னச்சாமி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்கள்.


Next Story