ஈரோட்டில் மாணவ–மாணவிகளை அழைத்து வரச்சென்ற பள்ளிக்கூட வேன் டிரைவர் மாரடைப்பு ஏற்பட்டு சாவு
ஈரோட்டில் மாணவ–மாணவிகளை அழைத்து வரச்சென்ற பள்ளிக்கூட வேன் டிரைவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். கட்டுப்பாட்டை இழந்த வேன் டீக்கடைக்குள் புகுந்தது.
ஈரோடு,
ஈரோடு கிருஷ்ணம்பாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 40). தனியார் பள்ளிக்கூட வேன் டிரைவர். இவர் நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கூட மாணவ–மாணவிகளை அழைத்து வருவதற்காக கருங்கல்பாளையம் பகுதிக்கு சென்று கொண்டு இருந்தார். இந்த வேனில் மாணவ –மாணவிகளை ஏற்றி இறக்குவதற்கு உதவியாக கருங்கல்பாளையம் ஜெயகோபால் வீதியை சேர்ந்த வீரமணி (55) என்ற பெண் இருந்தார்.
கருங்கல்பாளையம் கே.ஏ.எஸ். நகர் பகுதியில் வேன் சென்றுகொண்டு இருந்தபோது செந்தில்குமாருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் அவரால் தொடர்ந்து வேனை ஓட்ட முடியவில்லை. அந்த நேரத்தில் அவர் தனது நெஞ்சில் கைவைத்தபடி வேனை பத்திரமாக நிறுத்த முயன்றார்.
எனினும் வேன் ரோட்டோரத்தில் இருந்த துரைராஜ் என்பவரது டீக்கடைக்குள் மெதுவாக புகுந்தது. இதனால் டீக்கடையில் இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடி உயிர் தப்பினார்கள். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் வேனுக்குள் ஏறி யாரும் இருக்கிறார்களா? என்று பார்த்தனர். அப்போது டிரைவர் செந்தில்குமார் நெஞ்சை பிடித்தபடி தனது இருக்கையில் அப்படியே இருந்தார். மேலும் வீரமணி அதிர்ச்சியில் உறைந்து போய் இருந்தார். உடனே அவர்கள் டிரைவர் செந்தில்குமாரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்த டாக்டர்கள் செந்தில்குமார் மாரடைப்பால் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.