நீர்நிலைகளில் தொழிற்சாலை கழிவுகளை கொட்டினால் கடும் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை


நீர்நிலைகளில் தொழிற்சாலை கழிவுகளை கொட்டினால் கடும் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 11 Nov 2017 3:30 AM IST (Updated: 11 Nov 2017 1:19 AM IST)
t-max-icont-min-icon

நீர்நிலைகளில் அருகே தொழிற்சாலை கழிவுகளை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் டி.ஜி.வினய் எச்சரிக்கை செய்துள்ளார்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

தமிழகத்தில் தொழில் மற்றும் விவசாயம் மூலம் திண்டுக்கல் முன்னோடி மாவட்டமாக திகழ்கிறது. இங்குள்ள அனைத்து தொழிற்சாலைகளும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. தொழிற்சாலை கழிவுகள் முறையாக சுத்திகரிக்கப்பட்டு, வெளியேற்றப்படுகிறதா? என ஆய்வு செய்யப்படுகிறது.

ஆனால், சமீபகாலமாக வெளிமாவட்டங்களில் இருந்து லாரிகள் மூலம் அபாயகரமான தொழிற்சாலை கழிவுகள் கொண்டு வரப்பட்டு, இங்கு கொட்டப்பட்டது. அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே சுத்திகரிக்கப்படாத தொழிற்சாலை திரவக்கழிவுகளை வாகனங்களில் கொண்டு வந்து சாலையோரம், நீர்நிலைகளில் கொட்டப்படுகிறது.

சமீபத்தில் ஒட்டன்சத்திரம் அருகே தாராபுரம் சாலையில் சின்னயகவுண்டன்வலசு கிராமத்தில் நீர்நிலையில் பால் பதனிடும் தொழிற்சாலைகளில் இருந்து எடுத்து வரப்பட்ட திரவக்கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. இது சட்டவிரோத செயலாகும். இதுபோன்று நீர்நிலைகளில் கழிவுகளை கொட்டுபவர்கள், அதற்கு உடந்தையாக இருந்தவர்கள், தொழிற்சாலை உரிமையாளர் மீது இந்திய தண்டனை சட்டத்தின்படி கடுமையான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் கைது செய்யப்படுவார்கள்.

மேலும் திரவக்கழிவுகளை ஏற்றி வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, லாரி உரிமையாளர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கலெக்டர் கூறியிருக்கிறார்.


Next Story