மது குடிக்க பணம் கேட்டு மனைவியை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

மது குடிக்க பணம் கேட்டு மனைவியை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
சேலம்,
சேலம் அருகே உள்ள சுக்கம்பட்டியை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 51), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ராஜேஸ்வரி (45). இத்தம்பதிக்கு சிவகுமார் என்ற மகனும், கீர்த்திகா என்ற மகளும் உள்ளனர். தர்மராஜிக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. இதனால், கூலி வேலை செய்து கிடைக்கும் சம்பளத்தை மது குடித்தே செலவழித்து வந்தார்.
குடும்பம் நடத்த வீட்டில் மனைவி ராஜேஸ்வரியிடம் பணம் கொடுப்பதில்லை. மேலும் மதுபோதையில் தர்மராஜ், மனைவி ராஜேஸ்வரியுடன் அடிக்கடி சண்டையிடுவதையும் வழக்கமாக கொண்டிருந்தார். குடும்ப நடத்த வழியின்றி, ராஜேஸ்வரியும் கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தினார்.
இடம் பெயர்ந்தால், கணவர் குணம் மாறலாம் என்ற எண்ணத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மேட்டூர் அருகே உள்ள இரட்டை புளியமரத்தூர் ராமன்நகரில் உள்ள சகோதரன் ராஜேந்திரன் வீடு அருகே ராஜேஸ்வரி குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
ஆனாலும், தர்மராஜ் மது குடிக்கும் பழக்கத்தையும், மனைவியுடன் சண்டையிடுவதையும் நிறுத்தவில்லை. கடந்த 16.3.2012 அன்று நள்ளிரவு மதுபோதையில் வீட்டிற்கு வந்த தர்மராஜ், மனைவியிடம் வீட்டில் ஏன் சமைக்கவில்லை என்றும், மது குடிப்பதற்கு பணம்தர ஏன் மறுக்கிறாய்? என்றும் கூறி தகராறில் ஈடுபட்டார். மேலும் பசியால் ஆத்திரம் அடைந்த தர்மராஜ், ராஜேஸ்வரியின் கழுத்தை நெரித்து, சுவரில் அவரது தலையை மோதி உள்ளார். இதில் காயமடைந்த ராஜேஸ்வரி உயிரிழந்தார்.
இந்த கொலை குறித்து கருமலைக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்மராஜை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சேலம் 3–வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் நேற்று கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது. தர்மராஜ் மீதான கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து நீதிபதி எஸ்.எழில் தீர்ப்பளித்தார்.