மின்கம்பத்தில் மோதி மின்சார ரெயிலில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் பலி
மின்கம்பத்தில் மோதி மின்சார ரெயிலில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தாம்பரம்,
காஞ்சீபுரம் மாவட்டம் மறைமலைநகர், மறைமலை அடிகள் தெருவைச் சேர்ந்தவர் ரவி. இவருடைய மகன் தினகரன்(வயது 20). இவர், சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் தினகரன், கல்லூரியில் பணம் கட்டி விட்டு வீட்டுக்கு புறப்பட்டார். இதற்காக அவர் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயிலில் சென்றார். அவர் ரெயிலில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்ததாக கூறப்படுகிறது.
மாணவர் பலி
பொத்தேரி அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக தண்டவாளம் அருகே உள்ள மின்கம்பத்தில் மோதி ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய தினகரனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே தினகரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தாம்பரம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story