ரசாயன கலவை பூசும் பணி நிறைவடைந்தது: புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கும் திருவள்ளுவர் சிலை


ரசாயன கலவை பூசும் பணி நிறைவடைந்தது: புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கும் திருவள்ளுவர் சிலை
x
தினத்தந்தி 12 Nov 2017 4:15 AM IST (Updated: 11 Nov 2017 10:49 PM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையில் ரசாயன கலவை பூசும் பணி நிறைவடைந்தது. இதனால் புதுப்பொலிவுடன் திருவள்ளுவர் சிலை காட்சி அளிக்கிறது. இதையொட்டி படகு போக்குவரத்து விரைவில் தொடங்கப்படவுள்ளது.

கன்னியாகுமரி,

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள பாறையில் திருவள்ளுவருக்கு 133 அடி உயர சிலை அமைக்கப்பட்டு உள்ளது. 2000–வது ஆண்டு இதனை அப்போதைய முதல்–அமைச்சர் கருணாநிதி  திறந்து வைத்தார். அதன்பின்பு கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகள் படகில் சென்று இந்த சிலையையும் பார்வையிட்டு வருகிறார்கள்.

திருவள்ளுவர் சிலை கடல் நடுவே அமைந்துள்ளதால் உப்பு காற்றால் பாதிப்புக்கு ஆளாகும். எனவே 3 ஆண்டுக்கு ஒரு முறை ரசாயன கலவை பூசி பராமரிக்க வேண்டும்.

அதன்படி திருவள்ளுவர் சிலை பராமரிப்பு பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் 17–ந் தேதி தொடங்கியது. இதையடுத்து சிலையை சுற்றி சுமார் 140 அடி உயரத்திற்கு சாரம் கட்டப்பட்டது. இப்பணிகள் முடிந்ததும் சிலையில் இருந்த கசடுகள், வெடிப்புகள் போன்றவை சிமெண்டு கலவை  மூலம் சரிசெய்யப்பட்டது. தொடர்ந்து சிலையை சுற்றி காகித கூழ் ஒட்டி சுத்தப்படுத்தப்பட்டது. இம்முறை 2 தடவை காகித கூழ் ஒட்டி நன்னீர் மூலம் சுத்தப்படுத்தும் பணி நடந்தது.

பிறகு சிலையை சுற்றிலும் ரசாயன கலவை பூசப்பட்டது. சிலை மற்றும் பீடம், உள்புறம் என அனைத்து பகுதிகளிலும் ரசாயன கலவை பூசும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. இந்த பணிகள் அனைத்தும் தற்போது நிறைவடைந்தது.

இதைத்தொடர்ந்து 14–ந் தேதிக்கு பிறகு திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நடைபெறலாம் என தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக பொறியாளர்கள் பரிந்துரை செய்துள்ளனர். இன்னும் சில நாட்களில் சபரிமலை சீசன் தொடங்க உள்ளது. அப்போது, ஆயிரக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் கன்னியாகுமரியில் கூடுவார்கள்.

அவர்கள் திருவள்ளுவர் சிலையை பார்க்க வசதியாக விரைவில் படகு போக்குவரத்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 7 மாதங்களுக்கு பின்பு திருவள்ளுவர் சிலையை பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் உள்ளனர்.


Next Story