எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: ரூ.735 கோடி மதிப்பில் நலத்திட்டங்கள் முதல்–அமைச்சர் தொடங்கி வைக்கிறார்


எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: ரூ.735 கோடி மதிப்பில் நலத்திட்டங்கள் முதல்–அமைச்சர் தொடங்கி வைக்கிறார்
x
தினத்தந்தி 12 Nov 2017 4:30 AM IST (Updated: 12 Nov 2017 12:10 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. விழாவில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு ரூ.735 கோடி மதிப்பில் நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

நெல்லை,

தமிழக அரசின் சார்பில், முன்னாள் முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மாவட்ட வாரியாக கொண்டாடப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டத்தின் சார்பில் நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள கோர்ட்டு எதிரே உள்ள மைதானத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெறுகிறது.

விழாவில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள். விழாவுக்கு சபாநாயகர் தனபால் தலைமை தாங்குகிறார். பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை சிறப்புரை ஆற்றுகிறார். தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி முன்னிலை வகிக்கிறார்.

விழாவில், எம்.ஜி.ஆர். உருவப்படத்தை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார். மேலும் ரூ.118.02 கோடி செலவில் முடிவடைந்த 192 திட்டப் பணிகளை திறந்து வைக்கிறார். ரூ.528.91 கோடி மதிப்பிலான 142 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 34 ஆயிரத்து 655 பேருக்கு ரூ.87.74 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். இதுதவிர பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசுகிறார்.

விழாவில் நெல்லை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி., மற்றும் எம்.பி.க்கள் முத்துக்கருப்பன், வசந்தி முருகேசன், எம்.எல்.ஏ.க்கள் முருகையா பாண்டியன், செல்வமோகன்தாஸ் பாண்டியன், இன்பதுரை, மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். முன்னதாக தமிழ்நாடு அரசு தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்று பேசுகிறார். முடிவில் நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நன்றி கூறுகிறார்.

இந்த விழாவையொட்டி விழா அரங்கில் அமைக்கப்பட்டு இருக்கும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா புகைப்பட கண்காட்சியை இன்று காலை 10 மணிக்கு அமைச்சர்கள் திறந்து வைக்கின்றனர். பகல் 1 மணிக்கு எம்.ஜி.ஆர். புகழ்பாடும் இசை கச்சேரி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

விழாவுக்கான ஏற்பாடுகளை அமைச்சர் ராஜலட்சுமி தலைமையில் நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறையினர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் செய்து வருகின்றனர்.


Next Story