அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பொதுமக்கள் இடைத்தரகர்களிடம் ஏமாற வேண்டாம்


அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பொதுமக்கள் இடைத்தரகர்களிடம் ஏமாற வேண்டாம்
x
தினத்தந்தி 12 Nov 2017 4:15 AM IST (Updated: 12 Nov 2017 12:19 AM IST)
t-max-icont-min-icon

அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் நீலகிரி பொதுமக்கள் இடைத்தரகர்களிடம் ஏமாற வேண்டாம் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிவுரை வழங்கி உள்ளார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் (ஓவேலி பேரூராட்சி தவிர) 2015–2016 மற்றும் 2016–2017–ம் ஆண்டுகளில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு குடிசை மற்றும் மண் வீடுகளை சூரிய மின் ஆற்றலுடன் கூடிய கான்கிரீட் வீடுகளாக மாற்றுவதற்கு வீடு ஒன்றுக்கு ரூ.2.10 லட்சம் வீதம் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வீடுகள் கட்டி கொடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் பயனடைய கீழ்க்கண்ட அடிப்படை தகுதிகள் இருக்க வேண்டும். அதன்படி, சம்பந்தப்பட்ட நபர் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினராக இருக்க வேண்டும். தனது பெயரோ அல்லது தன் குடும்ப உறுப்பினரது பெயரோ கொண்ட சொந்தமான பட்டா நிலத்தில் மண் சுவருடன் கூடிய (கான்கிரீட் கூரை அல்லாத) புல் கூரை, தகரம், ஆஸ்பெஸ்டாஸ், மண் ஓடு கூரை அல்லது முழுமையாக புற்களால் வேயப்பட்ட கூரை வீட்டினை கொண்டிருத்தல் வேண்டும்.

பேரூராட்சியிலோ, நகராட்சியிலோ அல்லது வேறு எங்கும் அவருக்கு சொந்தமாக வீடுகள் இருக்கக்கூடாது. அரசு மூலம் வழங்கப்பட்ட எந்தவொரு சலுகையிலும் வீடு கட்டியிருக்கக்கூடாது. இத்திட்டத்தின் கீழ் 300 சதுர அடிக்கு குறையாமல் வீடுகள் அமைத்து கொடுக்க குடிசை வீடுகள், மண் சுவர் மற்றும் புல் கூரைகள், மண் சுவர் மற்றும் தகரம், ஆஸ்பெஸ்டாஸ் கூரைகள், மண் சுவர் மற்றும் ஓடு கூரைகள் தேர்வு செய்யப்படுகிறது.

மேற்படி நேர்வில் உடல் ஊனமுற்றோர், மனவளர்ச்சி குன்றியோர், விதவைகள், கைவிடப்பட்ட பெண்கள், பெண்களை தலைவராக கொண்ட குடும்பங்கள், மாற்று பாலினத்தார் மற்றும் ஆதிவாசி, பழங்குடியினர்களுக்கு முன்னரிமை வழங்கப்படுகிறது. அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டிக்கொடுக்க சம்பந்தப்பட்ட நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் மூலமாக மட்டுமே இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதால், நகராட்சி மற்றும் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தகுதி வாய்ந்த நபர்கள் சம்பந்தப்பட்ட நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகத்தை நேரடியாக அணுகி இத்திட்டத்தின் மூலம் பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், வீடுகள் கட்டி தருவதாக இடைத்தரகர்கள் கூறும்போது, அவர்களிடம் பணமோ அல்லது ஆவணங்களோ கொடுத்து பொதுமக்கள் ஏமாற வேண்டாம். இடைத்தரகர்களாக யாரேனும் செயல்படுவது கண்டறியப்பட்டால், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு 9943126000 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story