திவாகரனுக்கு சொந்தமான கல்லூரியில் வினாத்தாள்கள் கொண்டு வந்த வாகனத்திலும் அதிகாரிகள் சோதனை


திவாகரனுக்கு சொந்தமான கல்லூரியில் வினாத்தாள்கள் கொண்டு வந்த வாகனத்திலும் அதிகாரிகள் சோதனை
x
தினத்தந்தி 11 Nov 2017 11:15 PM GMT (Updated: 11 Nov 2017 7:40 PM GMT)

மன்னார்குடியில் திவாகரனுக்கு சொந்தமான கல்லூரியில் வினாத்தாள்கள் கொண்டு வந்த வாகனத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

மன்னார்குடி,

மன்னார்குடி அருகே சுந்தரக்கோட்டையில் உள்ள அ.தி.மு.க. (அம்மா) அணியின் பொதுச்செயலாளர் சசிகலாவின் தம்பி திவாகரனின் வீடு மற்றும் கல்லூரியில் நேற்று 3-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். கல்லூரியில் சோதனை நடந்துகொண்டிருந்த போது திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு வினாத்தாள்களை எடுத்து கொண்டு பல்கலைக் கழக வாகனம் கல்லூரிக்குள் வந்தது. அந்த வாகனத்தை போலீசார் மறித்து வாகனத்துக்குள் வினாத்தாள்கள் தான் உள்ளதா? என சோதனை செய்தனர். அப்போது வாகனத்தில் வினாத்தாள்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கல்லூரிக்குள் வினாத்தாள்களை எடுத்து செல்ல போலீசார் அனுமதி அளித்தனர்.

இந்தநிலையில் கல்லூரிக்குள் வந்த வருமானவரித்துறை அதிகாரி ஒருவர் நிருபர்களிடம்கூறியதாவது:-

தற்போது சோதனை நடைபெற்று வரும் இடங்களில் இருந்து பல ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆவணங்கள் குறித்து தற்போது ஏதும் தெரிவிக்க முடியாது. திவாகரனின் வீடு மற்றும் கல்லூரியில் நாளையும்(இன்று) சோதனை தொடர வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். சுந்தரக்கோட்டையில் 3-வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்றதால் மன்னார்குடி-மதுக்கூர் சாலையில் சுந்தரக்கோட்டை பஸ் நிறுத்தம், கீழத்திருப்பாலக்குடி பஸ் நிறுத்தம் மற்றும் சோதனை நடைபெற்று வரும் திவாகரனின் கல்லூரி ஆகிய இடங்களில் போலீசார் சாலை தடுப்புகளை அமைத்து அந்த வழியாக வரும் வாகனங்களை சோதனை செய்து அனுப்பி வைக்கிறார்கள். மேலும் திவாகரனின் கல்லூரி மற்றும் வீட்டின் முன் மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Related Tags :
Next Story