குடிபோதையில் தகராறு: அரசு பஸ் டிரைவர் குத்திக்கொலை
மதுரை செக்கானூரணி அருகே குடிபோதையில் அரசு பஸ் டிரைவர் குத்திக்கொலை.
செக்கானூரணி,
மதுரை செக்கானூரணி அருகே உள்ள நேதாஜி நகரை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 43). அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் விருமாண்டி(50).
இவர்கள் இருவரும் நேற்று இரவு அந்த பகுதியில் உள்ள கடையில் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த விருமாண்டி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரபாகரனை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்தம் சொட்ட, செட்ட அங்கிருந்து தப்பி ஓடினார். பின்னர் செக்கானூரணி போலீஸ் நிலையம் அருகே மயங்கி விழுந்தார். அவரை போலீசார் மீட்டு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விருமாண்டியை கைது செய்தனர். விருமாண்டி பல்வேறு வழக்குகளில் கைதாகி சிறை தண்டனை பெற்று சமீபத்தில்தான் தண்டனை காலம் முடிந்து வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.