டாக்டர்கள் வராததை கண்டித்து கால்நடைகளுடன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
வேடசந்தூர் அருகே டாக்டர்கள் வராததை கண்டித்து கால்நடைகளுடன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
வேடசந்தூர்
வேடசந்தூர் அருகே உள்ள கூம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் கால்நடை வளர்ப்பு தொழிலில் பலர் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக பசு மற்றும் எருமை மாடுகளை அதிக அளவில் வளர்த்து வருகின்றனர். பால் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு, கூம்பூரில் கால்நடை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. நோய் பாதிப்புக்கான சிகிச்சை, தடுப்பூசி, செயற்கை முறை கருவூட்டல் ஆகியவை அளிக்கப்படுகிறது. இந்தநிலையில் கால்நடை மருத்துவமனைக்கு, கடந்த சில தினங்களாக டாக்டர்கள் சரிவர வருவதில்லை.
கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டுமானால் சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரெங்கநாதபுரம், பல்லாநத்தம், கோவிலூர் ஆகிய இடங்களில் உள்ள கால்நடை மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. நீண்ட தூரத்துக்கு கால்நடைகளை அழைத்து செல்வதால் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுமட்டுமின்றி தனியார் டாக்டர்களிடம் பணம் கொடுத்து கால்நடைகளுக்கு சிகிச்சை பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்தநிலையில் கூம்பூர் கால்நடை மருத்துவமனைக்கு டாக்டர்கள் வராததை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்காக கிராம மக்கள் தங்களது மாடுகளை ஊர்வலமாக அழைத்து சென்றனர்.
பின்னர் கூம்பூர் கால்நடை மருத்துவமனை முன்பு மாடுகளுடன் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில பொருளாளர் சங்கர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.