சேலம் மத்திய சிறையில் பரபரப்பு: 3 கைதிகள் மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல்


சேலம் மத்திய சிறையில் பரபரப்பு: 3 கைதிகள் மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 11 Nov 2017 11:15 PM GMT (Updated: 11 Nov 2017 8:24 PM GMT)

சேலம் மத்திய சிறையில், ஆடைகளை கழற்றி சோதனை செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து 3 கைதிகள் மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்,

சேலம் மத்திய சிறையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என 800-க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். கைதிகள் இடையே செல்போன் மற்றும் கஞ்சா புழக்கம் இருப்பதும், அதை சிறைத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி கைப்பற்றுவதும் வழக்கமாக இருந்து வருகிறது.

சேலம் மத்திய சிறையில் குற்ற வழக்கில் தொடர்புடைய நாமக்கல்லை சேர்ந்த கைதிகள் ஸ்டீபன்ராஜ் (வயது25), பிரகாஷ்(23) ஆகியோரும் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களுடன் ஒரே அறையில் சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்த கொரில்லா செந்தில்(24) என்ற கைதியும் அடைக்கப்பட்டிருந்தார். இவர்கள் இருந்த அறையில் போதிய வசதி இல்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக அதை “தண்டனை அறை“ என்று சொல்வதுண்டாம். நேற்று முன்தினம் வழக்கு தொடர்பாக ஸ்டீபன்ராஜ், பிரகாஷ் ஆகியோர் நாமக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து செல்லப்பட்டனர்.

அங்கு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், மீண்டும் சேலம் மத்திய சிறைக்கு திரும்ப அழைத்து வரப்பட்டனர். அப்போது வழக்கம்போல அனைத்து கைதிகளையும் சிறைக்காவலர்கள் சோதனையிடுவதுபோல, ஸ்டீபன்ராஜ் மற்றும் பிரகாஷ் ஆகியோரையும் சோதனையிட்டனர். உள்ளாடைக்குள் பதுக்கி கஞ்சா மற்றும் செல்போன் உள்ளே எடுத்து செல்கிறார்களா? என்ற சந்தேகத்தில் இருவரின் ஆடைகளையும் கழற்றி கடுமையாக சோதனைக்குள்ளாக்கப்பட்டனர்.

அப்போது இருவரும் அந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிறைக்காவலர்களுடன் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் சோதனைக்கு பிறகு அவர்கள் சிறை அறையில் அடைக்கப்பட்டனர்.

இந்தநிலையில் நேற்று காலை 12 மணிக்கு ஸ்டீபன்ராஜ், பிரகாஷ் மற்றும் கொரில்லா செந்தில் ஆகியோர் சமையல் அறை அருகே உள்ள வேப்ப மரத்தில் வேகமாக ஏறினர். மரத்தின் உச்சிப்பகுதிக்கு சென்ற அவர்கள் தங்களது மேலாடைகளை கழற்றி வீசினர். பின்னர் அவர்கள் கூறுகையில், “சிறையில் மற்ற கைதிகளைவிட, எங்களை சிறைக்காவலர்கள் அநாகரிகமாக நடத்தி சோதனையிட்டனர். நாங்கள் அடைக்கப்பட்டிருக்கும் அறையில் எவ்வித வசதியும் இல்லை. எனவே, இந்த நடவடிக்கையை கண்டித்து மரத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்யப்போகிறோம்“ என மூவரும் மிரட்டல் விடுத்தனர். இதனால், சிறை கைதிகள் மற்றும் அதிகாரிகள் இடையே பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து சிறை கண்காணிப்பாளர் ஆண்டாள், துணை ஜெயிலர் சுகுமாரன் ஆகியோர் அங்கு விரைந்து வந்து மூவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மரத்தில் இருந்த படியே குச்சியால், தங்களது கைகள் மற்றும் உடலில் கிழித்தனர். சிறைத்துறை அதிகாரிகள் மீண்டும் கேட்டுக்கொண்டதன்பேரில் மதியம் 1.15 மணிக்கு அவர்கள் மரத்தில் இருந்து கீழே இறங்கி வந்தனர்.

கைதிகள் ஸ்டீபன்ராஜ், பிரகாஷ் மற்றும் கொரில்லா செந்தில் ஆகியோர் மரக்குச்சியால் உடலில் கிழித்துக்கொண்டதால் ஏற்பட்ட காயத்திற்காக, அவர்கள் சிறை உள்மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Related Tags :
Next Story