அமைச்சர் கந்தசாமியை மாற்றுத்திறனாளிகள் முற்றுகை


அமைச்சர் கந்தசாமியை மாற்றுத்திறனாளிகள் முற்றுகை
x
தினத்தந்தி 11 Nov 2017 11:45 PM GMT (Updated: 11 Nov 2017 9:07 PM GMT)

மாற்றுத்திறனாளிகள் தொழில் தொடங்க அரசிடம் பெற்ற கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அமைச்சர் கந்தசாமியை மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டனர்.

புதுச்சேரி,

மாற்றுத்திறனாளிகள் தின விழா அடுத்த மாதம் (டிசம்பர்) 3–ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு புதுவை அரசு சமூக நலத்துறை சார்பில் உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதன் தொடக்க விழாவில் சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி தலைமை தாங்கி விளையாட்டு போட்டிகளை தொடங்கிவைத்தார். அன்பழகன் எம்.எல்.ஏ., அரசு செயலர் மிகிர்வரதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நலத்துறை இயக்குனர் சாரங்கபாணி, துணை இயக்குனர் சரோஜினி, உதவி இயக்குனர் ரத்னா, கண்காணிப்பாளர் அல்லிமுத்து மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில் அமைச்சர் கந்தசாமியை மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டு கோரிக்கை விடுத்தனர். அப்போது அவர்கள், புதுச்சேரி அரசு சார்பில் மாற்றுத்திறனாளிகள் பொருளாதாரத்தில் மேம்பட தொழில் தொடங்குவதற்காக கடனுதவி வழங்கப்படுகிறது. அவ்வாறு வழங்கப்படும் கடன்களுக்கான வட்டி மிகவும் அதிகமாக உள்ளது. எனவே தங்களுக்கு வழங்கப்படும் கடனிற்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும்.

வட்டியில்லாமல் கடனுதவி வழங்க வேண்டும் என்றும், கடந்த ஆட்சியில் முன்னாள் முதல்–அமைச்சர் ரங்கசாமியிடம் கோரிக்கை வைத்தோம். அவரும் எங்களின் கடனிற்கான வட்டியை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். அதன்பின் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. ஆனால் காங்கிரஸ் அரசு எங்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. உடனே தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

அப்போது அமைச்சர் கந்தசாமி, மாற்றுத்திறனாளிகளிடம் அரசிடம் கடன் பெற்று தொழில் தொடங்கி நடத்துபவர்களின் வட்டியை மட்டும் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அரசிடம் கடனை பெற்று தொழில் தொடங்காமல் வேறு செலவு செய்தவர்களின் வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது என்றார். ஆனால் இதனை மாற்றுத்திறனாளிகள் ஏற்கவில்லை.

தொழில் தொடங்க ரூ.1 லட்சம் கேட்டு விண்ணப்பித்தால், அதிகாரிகள் ரூ.30 ஆயிரம்தான் தருகின்றனர், அதை வைத்து என்ன தொழில் தொடங்க முடியும். எனவே கடன்பெற்ற அனைவரது வட்டியையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கைவைத்தனர். அப்போது அமைச்சர் கந்தசாமி, இதுதொடர்பாக சட்டசபையில் பேசி முடிவு செய்யப்படும் என உறுதியளித்தார்.

இதைத் தொடர்ந்து, உடல் ஊனமுற்றோர், பார்வைத்திறன் மற்றும் செவித்திறன் குன்றியோர், வாய் பேச இயலாதவர்கள் என தனித்தனியாக பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 500–க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இதில் வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்த மாதம் 3–ந் தேதி நடைபெறும் உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழாவில் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.


Next Story