உல்லாசமாக இருக்க இடையூறாக இருந்ததால் சிறுவனை சூடுவைத்து சித்ரவதை செய்த கள்ளக்காதல் ஜோடி கைது


உல்லாசமாக இருக்க இடையூறாக இருந்ததால் சிறுவனை சூடுவைத்து சித்ரவதை செய்த கள்ளக்காதல் ஜோடி கைது
x
தினத்தந்தி 12 Nov 2017 12:00 AM GMT (Updated: 11 Nov 2017 9:07 PM GMT)

உல்லாசமாக இருக்க இடையூறாக இருந்ததால் சிறுவனை சூடுவைத்து சித்ரவதை செய்த காரைக்காலைச் சேர்ந்த கள்ளக்காதல் ஜோடியை போலீசார் கைது செய்தனர்.

குண்டடம்,

திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே மேட்டுக் கடையை சேர்ந்தவர் சக்திவேல். இவர் மேட்டுக்கடையில் பஞ்சர் கடை வைத்துள்ளார். இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று அதிகாலை பஞ்சர் கடையை திறக்க சக்திவேல் சென்றார். அப்போது அவருடைய கடை முன்பு 5 வயது மதிக்க தக்க சிறுவன் அழுது கொண்டிருந்தான். அந்த சிறுவனிடம் விசாரித்த போது “தனது தாய் தங்கி இருக்கும் இடத்தை கூறியதோடு, தாயும், தாயுடன் தங்கியிருக்கும் மாமாவும் தன்னை அடித்து உதைப்பதாகவும், தனக்கு சாப்பாடு தருவது இல்லை என்றும், இதனால் வீட்டை விட்டு வெளியே வந்ததாகவும் அழுது கொண்டே கூறினான்.

பின்னர் அந்த சிறுவன், சட்டையை கழற்றி, தனது தாயும், அவருடன் தங்கியிருந்தவரும் அடித்து உதைத்ததால் உடலில் இருந்த காயங்களை காட்டினான். உடலில் ஆங்காங்கே சூடு வைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சக்திவேல் இது குறித்து குண்டடம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் விரைந்து சென்று அந்த சிறுவனை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

போலீசார் அந்த சிறுவன் கூறிய வீட்டின் அடையாளத்தை வைத்து அங்கு சென்று விசாரித்தனர். அப்போது அங்கு 30 வயது மதிக்க தக்க இளம் பெண் ஒருவரும், அவருடன் வாலிபர் ஒருவரும் தங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த இளம்பெண்ணிடம் விசாரித்தனர். விசாரணையில் அந்த பெண்ணின் பெயர் பானுப்பிரியா (வயது 30). அந்த வாலிபர் பானுப்பிரியாவின் கள்ளக்காதலன் ராஜேஷ் என்றும், பானுப்பிரியாவின் மகன்தான் அந்த சிறுவன் என்றும் அவனுடைய பெயர் சங்கர் என்ற இர்பான் (5) என்றும் தெரியவந்தது.

தொடர் விசாரணையில் பானுப்பிரியாவின் சொந்த ஊர் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் ஆகும். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியை சேர்ந்த அப்பாஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சந்தோஷ் (9), மதுமிதா (8) மற்றும் இர்பான் (5) என ஆகிய குழந்தைகள் உள்ளனர். இந்த 3 குழந்தைகள் பிறந்த பின்னர் அப்பாஸ், பானுப்பிரியாவை விட்டு பிரிந்து சென்று வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இதனால் குழந்தைகளுடன் தனியாக தங்கியிருந்த பானுப்பிரியாவுக்கும், காரைக்கால் திருக்கானூரை சேர்ந்த கட்டிட தொழிலாளி ராஜேஷ் (24) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடையில் கள்ளக்காதலாக மாறியது.

அதன்பின்னர் பானுப்பிரியா, தனது குழந்தைகள் மற்றும் கள்ளக்காதலன் ராஜேசுடன் திருப்பூர் மாவட்டம் பல்லடம் வந்து அங்கு ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தார். அப்போது சந்தோஷ் மற்றும் மதுமிதா ஆகிய 2 குழந்தைகளையும் சேவூரில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்து விட்டார். இர்பானை மட்டும் தன்னுடன் வைத்துக்கொண்டார். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் பானுப்பிரியா, தனது குழந்தை இர்பான் மற்றும் கள்ளக்காதலன் ராஜேசுடன் மேட்டுக்கடை வந்து வாடகை வீட்டில் குடியிருந்தார். இவர்கள் குடியிருக்கும் வாடகை வீடு ஒரு அறை மட்டும் கொண்டது என்பதால் அங்கு பானுப்பிரியாவும், அவருடைய கள்ளக்காதலனும் அடிக்கடி சந்தோஷமாக இருப்பதற்கு பெற்ற மகனே இடையூறாக இருப்பதாக பானுப்பிரியா கருதினார். இதையடுத்து மகன் என்றும் பாராமல் சிறுவன் இர்பானுக்கு சூடுவைத்தும், தோசைக்கல்லால் தாக்கியும் சித்ரவதை செய்துள்ளார்.

இதனால் சிறுவன் வலி தாங்க முடியாமல் அழுதுள்ளான். மேலும் பசியால் துடிக்கும் சிறுவனுக்கு சோறு கொடுக்காமல், வீட்டை விட்டு வெளியே தள்ளி, கதவை உள்பக்கமாக பூட்டிக்கொள்ளும் கல் நெஞ்சம் படைத்த பானுப்பிரியா, வீட்டினுள் கள்ளக்காதலுடன் உல்லாசத்தில் ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலையிலும் இர்பானை பானுப்பிரியா தாக்கியதால் வலி தாங்க முடியாத இர்பான் தனது தாயிடம் இருந்து தப்பி மேட்டுக்கடை பஸ் நிலையத்திற்கு வந்துள்ளான். மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து பானுப்பிரியாவையும், அவருடைய கள்ளக்காதலன் ராஜேசையும் போலீசார் கைது செய்து தாராபுரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இர்பான் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

Next Story