திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி பெண் என்ஜினீயரிடம் மோசடி; போலி டாக்டர் கைது


திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி பெண் என்ஜினீயரிடம் மோசடி; போலி டாக்டர் கைது
x
தினத்தந்தி 12 Nov 2017 4:45 AM IST (Updated: 12 Nov 2017 3:43 AM IST)
t-max-icont-min-icon

திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி, பெண் என்ஜினீயரிடம் ரூ.11½ லட்சம் மோசடி செய்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.

சென்னை,

சென்னை புறநகர் பகுதியை சேர்ந்தவர் லதா (வயது 36, பெயர் மாற்றப்பட்டுள்ளது). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர், சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எனது கணவர் இறந்துவிட்டார். எனக்கு ஒரு மகன் இருக்கிறான். மறுமணம் செய்துகொள்வதற்காக மணமகன் தேவை என்று திருமண இணையதளம் ஒன்றில் விளம்பரம் செய்தேன். அதைப்பார்த்து அமெரிக்காவில் இருந்து பேசுவதாக பிரசாந்த் பிரதாப் சிங் என்பவர் என்னிடம் பேசினார். அவர் என்னை திருமணம் செய்துகொள்வதாக விருப்பம் தெரிவித்தார். தன்னை டாக்டர் என்றும், எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் என்றும் கூறினார்.

சென்னை வந்து என்னை சந்திக்க விருப்பம் தெரிவித்தார். இதற்காக தனக்கு விசா தேவைப்படுவதாகவும், அதற்கு ரூ.11½ லட்சம் அனுப்பி வைக்கும்படியும் கூறினார். அதன்படி நானும் ரூ.11½ லட்சம் அனுப்பினேன். ஆனால் அவர் விசாவும் எடுக்கவில்லை, என்னை சந்திக்கவும் வரவில்லை. ரூ.11½ லட்சத்தை மோசடி செய்துவிட்டார். அவரது மோசடி வலையில் சிக்கவைத்து என்னை ஏமாற்றிவிட்டார். அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில் துணை கமிஷனர் செந்தில்குமார், உதவி கமிஷனர் வேல்முருகன் ஆகியோர் மேற்பார்வையில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். இதுதொடர்பாக சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியை சேர்ந்த குமார்துரை (33) என்பவர் கைது செய்யப்பட்டார்.

இவர், டாக்டர் இல்லை என்பதும், டாக்டர் என்று பொய் சொல்லி பணமோசடி செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுபோல கவுதம், ஜார்ஜ்குமார், ராஜன்துரை, பிரசாந்த் குமார் போன்ற பல பெயர்களில் திருமண ஆசைகாட்டி ஏராளமான பெண்களிடம் பணம் பறித்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இணையதளம் மூலம் யாராவது திருமண ஆசைகாட்டினால் அதை நம்பி பணம் கொடுத்து ஏமாறவேண்டாம் என்று போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். 

Next Story