திருவொற்றியூரில் மின்சார ரெயிலில் அடிபட்டு பிளஸ்–2 மாணவி பலி
திருவொற்றியூரில் மின்சார ரெயிலில் அடிபட்டு பிளஸ்–2 மாணவி பரிதாபமாக இறந்தார்.
திருவொற்றியூர்,
திருவொற்றியூர் அம்பேத்கர் நகர், 6–வது தெருவைச் சேர்ந்தவர் பென்னி ஜோசப். எலெக்ட்ரீஷியன். இவரது சொந்த ஊர் கேரள மாநிலம் ஆகும். இவருடைய மகள் பெட்டி பென்னி (வயது 17). இவர், திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலை பள்ளியில் சிறப்பு வகுப்பு முடிந்து வீட்டுக்கு திரும்பினார். மாணிக்க நகர் ரெயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி இருந்ததால் அந்த பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார்.
அப்போது கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்டிரல் நோக்கி வந்த மின்சார ரெயில் அவர் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த மாணவி பெட்டி பென்னியின் தலையின் பின்பகுதி கல்லில் மோதியது.
இதில் படுகாயம் அடைந்த பெட்டி பென்னி, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.