உஷாரய்யா உஷாரு..


உஷாரய்யா உஷாரு..
x
தினத்தந்தி 12 Nov 2017 11:30 AM GMT (Updated: 12 Nov 2017 10:42 AM GMT)

அவருக்கு 40 வயது. ஐநூறு பேருக்கு மேல் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் நிர்வாகப் பிரிவில் பணியாற்றுகிறார்.

அவருக்கு 40 வயது. ஐநூறு பேருக்கு மேல் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் நிர்வாகப் பிரிவில் பணியாற்றுகிறார். அவருக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகியுள்ளன. பள்ளியில் படிக்கும் குழந்தை ஒன்று உள்ளது.

அலுவலகத்தில் அவரோடு நிறைய பெண்கள் வேலை பார்க்கிறார் கள். அவர்களில் ஒரு பெண் கணவரைப் பிரிந்து வாழ்பவள். அவளது நெருங்கிய தோழி ஒருத்தி அதே நிறுவனத்தின் இன்னொரு துறையில் வேலைபார்க்கிறாள். தோழிகள் இருவரும் மாதத்தில் ஒருநாள் வெளியே சென்று கண்டதையும் சாப்பிட்டு, குடித்து, அவரவர் வாழ்க்கையில் நடந்ததை எல்லாம் மனம்விட்டுப்பேசி ‘ரிலாக்ஸ்’ செய்துகொள்வார்கள்.

அந்த பெண் சில ஆண்டுகளாக கணவரைப் பிரிந்து வாழ்ந்துவந்தாலும், விவாகரத்து பெறவில்லை. ‘விவாகரத்து பெறாமல் ஏன் காலந்தாழ்த்துகிறாய்?’ என்று தோழி அவளிடம் கேட்டபோது, ‘சரியான ஆள் ஒருவரை தேர்ந்தெடுத்து, அவரோடு பழகிப்பார்த்து, அவர் எனக்கு சரியானவராக இருப்பார் என்ற நம்பிக்கை வந்தால் மட்டுமே, கணவரை விவாகரத்து செய்வேன்’ என்று கூறிக்கொண்டிருந்தாள். ஒருசில மாதங்கள் கடந்ததும், ‘தான் விரும்பியது போன்ற ஒரு நபரை அலுவலகத்திலே தேடிக்கண்டுபிடித்துவிட்டேன். விரைவில் உனக்கு அறிமுகப்படுத்திவைக்கிறேன்’ என்றும் சொன்னாள்.

‘அந்த ஆள் திருமணமாகாதவரா அல்லது மனைவியைப் பிரிந்து வாழ்பவரா?’ என்று தோழி கேட்க அவள், ‘திருமணமாகாத இளைஞர்களை நம்ப முடியாது. நம்மையும், நம்மிடம் இருக்கும் பணத்தையும் பயன்படுத்திவிட்டு, இடையிலே கைவிட்டுவிடுவார்கள். மனைவியை பிரிந்து வாழ்பவர்களை பொறுத்தமட்டில் அவர்கள் எதற்காக பிரிந்தார்கள்? அவர் என்ன மாதிரியான பலவீனம் கொண்டவர் என்றும் நமக்கு தெரியாது. அதனால் மனைவியோடு மகிழ்ச்சியாக குடும்பம் நடத்திக்கொண்டிருக்கும் ஒருவரை வளைத்துப்போட்டிருக்கிறேன்’ என்றாள்.

அதை கேட்டதும் தோழி அதிர்ச்சியடைந்தாள். இவள் வாழ்க்கையை புதுப்பித்துக் கொள்ள இன்னொரு பெண்ணுக்கு துரோகம் செய்யப் போகிறாளே என்று கவலைப்பட்டாள்.

அடுத்த மாதம் வெளியே சந்திக்கும்போது, அவள் எந்த ஆணை வளைத்துப்போட்டிருக்கிறாள் என்பதை முழுமையாக கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தோழி ஆசைப்பட்டாள். அதற்கான சூழ்நிலை அமைந்தது.

அன்று அவர்கள் ஓட்டலில் சந்தித்தபோது விவாகரத்தான பெண் சிறிது நேரத்திலே தன்னை மறந்தநிலைக்கு சென்று, எதிர்காலத்தில் தனக்கு கணவன் ஆகப்போகிறவனைப் பற்றி தோழியிடம் பேச ஆரம்பித்தாள். ‘என்னோடு வேலை பார்க்கும் 40 வயது நபரை நான் காதலித்துக் கொண்டிருக்கிறேன்’ என்று அந்த நபரின் பெயரை சொன்னாள்.

‘மகிழ்ச்சியாக குடும்பம் நடத்திக் கொண்டிருக்கும் அவரை எப்படி அவரது மனைவியிடம் இருந்து பிரிப்பாய்?’ என்று தோழி கேட்டபோது, ‘அது ஒன்றும் பெரிய வேலையில்லை. எல்லா பெண்களுக்கும் கடந்தகால காதல் ஒன்று இருக்கும். அதை பட்டும்படாமலும் நிறைய பெண்கள் தங்கள் கணவரிடம் சொல்லிவிடுவார்கள். அதைவைத்து பிரச்சினையை உருவாக்க வேண்டியதுதான். ‘உன் பழைய காதலனின் சாயலில் நமது குழந்தை இருக்கிறது’ என்று பிரச்சினையை ஆரம்பித்தால் அப்படியே அவளை மனதொடியவைத்து வீட்டைவிட்டே கிளம்பவைத்துவிடலாம்’ என்று அவரிடம் கூறியிருக்கிறேன். அவரும் என் அழகில் மயங்கி விரைவில் குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தப் போகிறார்’ என்று கூறி, வெட்கமின்றி சிரித்தாள்.

அதை கேட்டுக் கொண்டிருந்த தோழிக்கு மனசாட்சி உறுத்தியது. அவள் போதையில் உளறியதை அப்படியே பதிவு செய்த அவள், அதை ஆதாரமாக வைத்துக் கொண்டு அந்த நாற்பது வயதுக்காரரையும், அவரது மனைவியையும் சந்தித்து உண்மையை எடுத்துக்கூறி, அவர்களது குடும்ப வாழ்க்கையை காப்பாற்ற முயற்சி செய்து கொண்டிருக்கிறாள்.

இப்படி எல்லாம்கூட நடக்கிறதுங்கிறதை நீங்களும் தெரிஞ்சுக் கணும்தானே!

- உஷாரு வரும். 

Next Story