இடைப்பாலினம்


இடைப்பாலினம்
x
தினத்தந்தி 12 Nov 2017 5:30 PM IST (Updated: 12 Nov 2017 4:42 PM IST)
t-max-icont-min-icon

இயற்கை புரியாத புதிர். தொடர்ந்து மாற்றங்கள் அதில் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. ஒரு நொடியைக்கூட அது வீணாக்குவது இல்லை.

யற்கை புரியாத புதிர். தொடர்ந்து மாற்றங்கள் அதில் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. ஒரு நொடியைக்கூட அது வீணாக்குவது இல்லை. நாம் நினைத்துப் பார்க்க முடியாத உயிரினங்களும், பல்லுயிரினத் தொகுப்புகளும் உலகின் இன்னொரு பகுதியில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

வாய்க்குள்ளிருந்து பொருட்களை வரவழைப்பது மட்டும் அதிசயம் அல்ல. உடலே அதிசயம். ஒவ்வொரு மனிதனும் அதிசயமாகவே ஆக்கப்பட்டிருக்கிறான். பூவும் அதிசயம், புல்லும் அதிசயம். வானத்தை விசாரிக்கும் பறவைகளும் அதிசயம்.

இயற்கையின் அதிசயங்களை ஏற்றுக்கொள்வதே பகுத்தறிவு. அவற்றில் எதுவும் உயர்ந்ததுமில்லை, எதுவும் தாழ்ந்ததுமில்லை.

மனிதர்களிடையே மரபுத் திரிபின் காரணமாக ஏற்பட்டது ‘இடைப்பாலினம்’ (transgender).

ஆணாகப் பிறந்து பெண்ணின் குணங்களைத் தரித்து பெண்ணாக வாழ விரும்புகிறவர்களை ‘திருநங்கைகள்’ என்றும், பெண்ணாய்ப் பிறந்து ஆணாக ஆனவர்களை ‘திருநம்பிகள்’ என்றும் அழைப்பது உண்டு.

கவிஞர் நா. காமராசன் அவர் எழுதிய ‘கறுப்பு மலர்கள்’ கவிதை நூலில் ‘சந்திப்பிழைபோல சந்ததிப்பிழைகள்’ என்று குறிப்பிட்டிருப்பார்.

ஆண், பெண் என்ற வரையறையைத் தாண்டி மனிதர்களை சமூகத்தால் சிந்திக்க முடிவதில்லை. ஆண் என்று அறியப்பட்டவர்கள் தங்களை ஆணில்லை என்று அறிவிப்பதும், பெண்ணென்று முத்திரை குத்தப்பட்டவர்கள் முழுமையான பெண் இல்லை என்று உணர்வதும் சமூகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்குகிற நிகழ்வுகள். ‘மூன்றாம் பால் முகம் திரிந்ததால் முளைத்த மூன்றாம் பால் இது’ என ஒத்துக்கொள்ள நம்மால் முடிவதில்லை.

இடைப்பாலினத்திற்கு இதுதான் காரணம் என்று தெளிவாக இன்னும் தெரியவில்லை. மரபுக்கூறின் தாக்கம் இருக்கலாம் என்று கருதுகிறார்கள். குழந்தை கருவிலிருக்கும்போதே ஹார்மோன்களின் உற்பத்தி ஆரம்பமாகிவிடுகிறது.

அதில் ஆண்களுக்கான ஹார்மோன் அதிகமாக சுரந்தால் அந்த குணங்களுடன் குழந்தைகள் குதிக்கின்றன. மூளையிலேயே பால் முடிவாகி விடுகிறது, முளையிலேயே தெளிவாகி விடுகிறது. அந்த ஹார்மோன்களின் அளவு வேறுபடும்போதும் பால் திரிபு ஏற்படலாம் எனக் கருதுகிறார்கள். தொடக்க அனுபவங்களும், பதின்மப் பருவத்தின் பின்பகுதியில் ஏற்படும் அனுபவங்களும் இதற்குக் காரணமாக இருக்கக்கூடும் என்றும் கருதுகிறார்கள்.

இந்தியச் சமூகம் இடைப்பாலினத்தை இழிவாகக் கருதவில்லை. ‘அரவாணின் தியாகம்தான் பாரதப்போரில் பாண்டவர் களின் வெற்றிக்குக் காரணமாக இருந்தது’ என்கிறது மகாபாரதம். முக்கியமான இடங்களில் அவர்களே காவல் இருந்தார்கள், ராஜாங்க ரகசியத்தைக் கட்டிக்காத்தார்கள். அந்தப்புரங்களில் அவர்கள் பாதுகாப்புப் பணி புரிந்தார்கள். இன்றும்கூட அவர்கள் திருஷ்டி கழித்தால் நல்லது என்ற நம்பிக்கை உண்டு.

இடைப்பாலினத்திற்கு வரலாற்றில் ஒரு மகத்துவம் உண்டு. தசாய் லூன் என்கிற இடைப்பாலினச் சீனரே காகிதத்தைக் கண்டுபிடித்தவர். அவரை கி.பி. 2000 வரை வரலாற்றை வடிவமைத்த நூறு பேர்களில் ஒருவராக மைக்கல் ஹார்ட் குறிப்பிடுகிறார்.

சீனம், கண்டுபிடித்த காகித நுட்பத்தை ரகசியமாகவே பல நூற்றாண்டுகள் வைத்திருந்தது. அவர் கண்டுபிடித்த காகிதம் சீன வரலாற்றை செம்மையாகப் பதிவு செய்ய பெரிதும் உதவியது.

எண்ணற்ற இடைப்பாலின மனிதர்கள் போரிலும், விஞ்ஞானத்திலும், இலக்கியத்திலும் ஈடுபட்டு இணையற்ற சாதனைகளைச் செய்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவர், ‘ஆயிரம் தினார் அடிமை’ என்று அழைக்கப்படுகிற மாலிக் காபூர். இந்திய சரித்திரத்தை மாற்றி எழுதிய தளபதி.

அலாவுதீனின் அரசவையில் நுழைந்த அவர் விரைவில் முன்னேறி நாட்டின் தளபதியாக உயர்ந்து ‘மாலிக் நாயப்’ என்கிற பெயரைப் பெற்றார்.

வடக்கிலிருந்து தெற்கிற்கு ஊடுருவிய முதல் படை அவருடையதாக இருந்தது. அவர் 612 யானைகள், 96,000 தங்கப் பாளங்கள், நகைகளும் முத்துக் களும் கொண்ட பல பெட்டிகள், 20,000 குதிரைகள் ஆகியவற்றைப் படையெடுப்பிற்குப் பிறகு டெல்லியை நோக்கிக் கொண்டு சென்றதாக பரணி என்கின்ற வரலாற்று ஆசிரியர் எழுதுகிறார்.

அலாவுதீன் கில்ஜி அவரை ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்றார். அந்த பரிசுப் பொருட்களைப் பார்த்து வியந்த டெல்லி மக்கள் வாயை மூடுவதற்கு பல மணி நேரம் ஆனதாம்.

உலகெங்கிலும் பல்வேறு துறைகளில் இன்று வரை இடைப்பாலினத்தினர் சாதித்து வருகிறார்கள். போர்க்களத்திலும், இலக்கியத்திலும், இசையிலும் அவர்கள் உன்னதங்களை நிகழ்த்தி வருகிறார்கள்.

ஆல்பர் கேஷியர் என்பவர் அமெரிக்க குடிமைப் போரின்போது ஒன்றியப்படையின் சார்பாக போரில் கலந்து கொண்டு வீர சாகசங்களைக் காட்டியவர். அப்போது பெண் சிப்பாயாகப் பிரசித்தி பெற்றவர்.

ஷெவாலியர் டியான் என்பவர் இடைப்பாலினத்தவராக இருந்தும் பிரான்சு நாட்டின் தூதராகவும், போர் வீரராகவும் பணியாற்றியவர். போலச்செய்வதில் (மிமிக்ரி) வல்லவராக இருந்தார். ஒற்று வேலையிலும் ஒப்பற்றவராக விளங்கினார்.

கார்லட் பிரவுன் என்பவர் கப்பற்படையில் அலுவலராகப் பணியாற்றினார்.

இந்தியாவிலும் எண்ணற்றோர் பொதுமேடைகளில் பணியாற்றி வருகிறார்கள். இடைப்பாலினத்தின் உரிமைகளுக்காகவும், அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் உழைத்து வருகிறார்கள்.

இடைப்பாலினத்திற்கு இம்சை நிகழ்ந்தது ஆங்கிலேயர்கள் ஆட்சியில். அவர்களை அறவே வெறுத்தார்கள். அவர்களுக்கு எதிரான சட்டங்களை தீட்டினார்கள். அவர்களை குற்றப்பரம்பரைச் சட்டத்தின்கீழ் கொண்டு வந்தார்கள். அன்றிலிருந்து அவர்கள் பட்ட அவமானம் தொடர்கதையானது.

‘இடைப்பாலினம்’ என்கிற பெயரை முதலில் பயன்படுத்தியவர் ஜான் ஆலிவென் என்கிற கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த உளவியல் நிபுணர். இன்று அது எல்லா மொழிகளிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது.

இடைப்பாலினத்தைச் சார்ந்தவர்களை கேளிக்கைப் பொருளாகப் பார்க்கிற பழக்கம் இடையிலே ஏற்பட்டது. அவர்கள் பொழுதுபோக்கு சாதனங்களில் நகைச்சுவை என்கிற பெயரில் மலினமான ரசனையைத் தூண்ட பயன்பட்டார்கள். இன்று அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது.

வாய்ப்பும், உரிமையும் வழங்கப்பட்டால் அனைவரும் சாதிக்க முடியும் என்பதை உலகெங்கிலும் அவர்கள் நிரூபித்து வருகிறார்கள். நிர்வாகம் எப்போதும் புறக்கணிக்கப்பட்டவர்கள் சார்பாகவே இயங்க வேண்டும். பல நூற்றாண்டுகளாக அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி துடைக்கப்பட வேண்டும். அப்போதுதான் பின்தங்கியவர்கள் எல்லைக்கோட்டை ஓடிக் கடக்க முடியும்.

2014-ம் ஆண்டு ஏப்ரல் 15-ந் தேதி உச்ச நீதிமன்றம் முக்கியமான உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. இடைப்பாலினத்தை அது அங்கீகரித்து ஆணை வெளியிட்டது. ‘மூன்றாம் பாலினம்’ என்று அழைத்து, ‘அது அவர்களுடைய மனித உரிமை தொடர்பான சங்கதி’ என்று அறிவித்தது.

அதுவரை அரசுப் பணிகளில் அவர்களை எங்கு கொண்டு சேர்ப்பது என்கிற குழப்பம் நிலவி வந்தது. அந்த உத்தரவு வெளிச்சக் கதிராய் பலர் விழிகளைத் திறந்தது. உச்ச நீதிமன்றம் வெறும் உத்தரவை மட்டும் பிறப்பிக்கவில்லை.

மூன்றாம் பாலினத்தைச் சார்ந்தவர்கள் உள்ளுக்குள் அனுபவிக்கும் வேதனையை அது சுட்டிக்காட்டியது. அவர்களின் மனப்போராட்டங்களையும், துயரங்களையும் சமூகம் பொருட்படுத்துவதேயில்லை என்கிற உண்மையை அது பதிவு செய்தது. அவர்கள் பொது இடங்களில் வன்மத்திற்கு உட்பட்டவர்களாக வாழ்கிறார்கள். அவர்கள் பல துறைகளிலும் புறக்கணிக்கப்படுகிறார்கள். கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவற்றில் அவர்கள் ஒதுக்கப்படுகிறார்கள் என்று உச்ச நீதிமன்றம் உரக்கக் கூறியது.

அது கேட்கத் தயாராக இல்லாத செவிகளிலும் விழுகிற வீரியத்தைப் பெற்றிருந்தது.

2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் மத்திய இந்தியாவில் இடைப்பாலினத்தைச் சேர்ந்த ஒருவர் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சமூகம் மட்டுமல்ல, பிறந்த வீடே இடைப்பாலினத்தை இழிவுபடுத்துவதாக இருக்கிறது. சில இல்லங்கள் இவர்களை விரட்டியடிப்பதை கண்ணீர் மல்கக் கூறியதைப் படிக்க நேர்ந்தது. அவர்களுடைய துயரங்களை ‘வாடாமல்லி’ என்கிற நாவல் மூலமாக சு.சமுத்திரம் பதிவு செய்திருந்தார்.

அண்மையில் ப்ரித்திகா யாஷினி என்கிற திருநங்கை காவல் துறைப் பணியில் இணைந்திருக்கிறார். அவர் இந்தியாவில் முதல் முறையாக இப்பணியில் நியமிக்கப்பட்ட இடைப்பாலினத்தைச் சார்ந்தவர். சென்னை, சூளைமேடு காவல்நிலையத்தில் அவர் பணியில் இணைந்தபோது பலரும் பார்த்து ஆச்சரியப்பட்டனர். இருசக்கர வாகனத்தில் வந்து அவர் இறங்கியபோது நிலையத்தினர் அனைவரும் எழுந்து நின்று வரவேற்றனர்.

அங்கிருந்த அலுவலர்கள் எந்த மாறுபாடும் இல்லாமல் அவரை சமமாக நடத்தப்போவதாக குறிப்பிட்டார்கள். அன்றே அவர் எல்லையை அறுதியிட அங்கிருந்து பயணித்தார்.

‘இது என் கனவுப் பணி. என் இலக்கை அடைய எத்தனையோ தடைகளைத் தாண்டி விட்டேன். நான் எல்லோரையும் விருப்பு வெறுப்பின்றி சட்டத்தின் முன்பு சமமாக நடத்துவேன். விதியை மீறுபவர்களிடம் கடுமையாக நடப்பேன்’ என்று வாக்குமூலம் தந்த யாஷினி சேலத்தில் பிறந்தவர். அவர் தந்தை ஆட்டோ ஓட்டுநர். ஆணாகப் பிறந்த அவர் அறுவைசிகிச்சையின் மூலம் பெண்ணாக மாறினார்.

முதலில் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றில் விடுதிக்காப்பாளராகப் பணி புரிந்தார். பிறகு மருத்துவமனை ஒன்றில் வேலை பார்த்தார். குடும்பம் அவரை மீண்டும் அள்ளி எடுத்துக்கொண்டது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவாலும், சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆணையாலும் அவர் காக்கிச் சட்டை மாட்டும் கண்ணியத்தைப் பெற்றிருக்கிறார்.

“அறிவு ஒன்றே நம்மைப் புறக்கணிக்காத அளவுக்கு உயர்த்தும். எத்தனை இடைஞ்சல்கள் வந்தாலும் அவற்றைத் தாண்டி உழைப்பின் மூலம் இலக்கை அடைய முடியும், அப்போது உலகே எழுந்து கை குலுக்கும்” என்பதே இச்செய்தி சொல்லும் சேதி.

(செய்தி தொடரும்)

அற்புதமான வைரம்

மாலிக்காபூர் வாரங் கல்லிற்குப் படையெடுத்தபோது அங்கிருந்த அற்புதமான வைரம் ஒன்றையும் டெல்லிக்குக் கொண்டு சென்றார். அதை அமீர் குஸ்ரூ ‘உலகத்தின் ஒப்பற்ற வைரம்’ என்று குறிப்பிடுகிறார். அதுவே ஆக்ராவைக் கைப்பற்றியபோது பாபர் கையில் கிடைத்த வைரம். பல கைகள் மாறி 1877-ம் ஆண்டு இங்கிலாந்து மகுடத்தில் இடம் பெற்றது.

பாபர் அந்த வைரத்தின் மதிப்பைப்பற்றிக் குறிப்பிடும்போது ஒட்டுமொத்த உலகிற்கு இரண்டு நாள் சாப்பாடு போடுமளவிற்கு மதிப்பு வாய்ந்தது என்றார். 

Next Story