தஞ்சை பெரியகோவிலில் கும்பாபிஷேகம் நடத்த திட்டம்: இந்திய தொல்லியல்துறை இயக்குனர் ஆய்வு
தஞ்சை பெரியகோவிலில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு வரும் நிலையில் இந்திய தொல்லியல்துறை இயக்குனர் ரோமெல்சிங் ஜாம்வால் ஆய்வு மேற்கொண்டார்.
தஞ்சாவூர்,
மாமன்னன் ராஜராஜசோழனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை பெரியகோவில் கட்டப்பட்டது. இன்றைக்கும் கட்டிட கலைக்கும், சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது. தொல்லியல்துறையினர் பராமரிப்பில் உள்ளது. தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம் கடந்த 1997–ம் ஆண்டு நடத்தப்பட்டது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்படும். அதன்படி 2009–ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இதுவரை கும்பாபிஷேகம் நடத்தவில்லை.
தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகத்தை விரைவில் நடத்த வேண்டும். சாமிகளுக்கு அபிஷேகம் செய்ய தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. இதை போக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர். பெரியகோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு இந்து சமய அறநிலையத்துறையும், அரண்மனை தேவஸ்தானமும் திட்டமிட்டுள்ளது.
இந்தநிலையில் இந்திய தொல்லியல்துறை இயக்குனர்(பராமரிப்பு) ரோமெல்சிங் ஜாம்வால் தலைமையிலான குழுவினர் நேற்று தஞ்சை பெரியகோவிலுக்கு வந்தனர். இவர்கள் கோவில் நுழைவுவாயில், கருவறை, ராஜராஜசோழன் கோபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் ரோமெல்சிங் ஜாம்வால் நிருபர்களிடம் கூறியதாவது:–
நினைவு சின்னங்களை எல்லாம் நாங்கள் பார்த்து ஆய்வு செய்து வருகிறோம். தஞ்சை பெரியகோவிலுக்கு என்னென்ன வசதிகள் தேவைப்படுகிறது. அதற்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆய்வு செய்துள்ளோம். கோவில் அலுவலர்கள், அறங்காவலர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளோம். எந்த பழமை வாய்ந்த கட்டிடமும் விரிசல் ஏற்படும். பெரியகோவில் ஆயிரம் ஆண்டு பழமைவாய்ந்தது. சில இடங்களில் சிறு, சிறு விரிசல்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் எந்த பாதிப்பும் இல்லை. சிறந்த கட்டுமான தொழில்நுட்பத்துடன் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. பலமாக தான் உள்ளது.
விரிசலை சரி செய்து கோவிலை பாதுகாப்பது குறித்து முடிவு செய்துள்ளோம். இதை விரைவில் செயல்படுத்துவோம். கோவில் சிதிலம் அடைந்துவிடும் என்று கவலைப்பட தேவையில்லை. எப்போதெல்லாம் நினைவு சின்னங்களை சீரமைக்க வேண்டுமோ அப்போதெல்லாம் ஆய்வு செய்து பணியை மேற்கொள்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது இந்திய தொல்லியல்துறை கண்காணிப்பாளர்(தமிழ்நாடு) சுப்பிரமணியன், முதுநிலை பராமரிப்பு அலுவலர்(தஞ்சை), அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜாபோன்ஸ்லே, கோவில் செயல் அலுவலர் மாதவன் ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர் பெரியகோவில் அருகே உள்ள தொல்லியல்துறை அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்திய தொல்லியல்துறை இயக்குனர் ரோமெல் ஜாம்வால் தலைமை தாங்கினார். இதில் கலெக்டர் அண்ணாதுரை, மாநகராட்சி ஆணையாளர் வரதராஜ் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை, அரண்மனை தேவஸ்தான அதிகாரிகள், இந்திய தொல்லியல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது தஞ்சை பெரியகோவிலில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. உடனே இந்திய தொல்லியல்துறை இயக்குனர், கும்பாபிஷேகத்திற்காக என்னென்ன வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்பது குறித்து கேட்டறிந்தார்.