எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா புகைப்பட கண்காட்சி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திறந்து வைத்தார்


எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா புகைப்பட கண்காட்சி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 13 Nov 2017 4:30 AM IST (Updated: 13 Nov 2017 12:19 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா புகைப்பட கண்காட்சியை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திறந்து வைத்தார்.

நெல்லை,

தமிழக அரசின் சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மாவட்டந்தோறும் நடந்து வருகிறது. நெல்லை மாவட்டத்தின் சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் நேற்று மாலை நடந்தது. விழாவையொட்டி எம்.ஜி.ஆர். பற்றிய புகைப்பட கண்காட்சி விழா மேடையின் அருகில் அமைக்கப்பட்டு இருந்தது.

இந்த கண்காட்சியை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேற்று காலை திறந்து வைத்தார். அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி, கலெக்டர் சந்தீப் நந்தூரி, எம்.பி.க்கள் முத்துக்கருப்பன், பிரபாகரன் மற்றும் அரசின் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள், அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

எம்.ஜி.ஆர். பற்றிய புகைப்பட கண்காட்சியில் எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக பதவியேற்ற புகைப்படம், அவரது தலைமையிலான அமைச்சரவை, பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், தந்தை பெரியார், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆகியோருடன் எம்.ஜி.ஆர். உள்ள புகைப்படங்கள் இடம் பெற்று இருந்தன. மேலும் மறைந்த முன்னாள் பிரதமர்கள் இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, ஆந்திர முதல்வர் என்.டி.ராமாராவ் ஆகியோருடன் இருக்கும் புகைப்படங்களும் கண்காட்சியில் வைக்கப்பட்டு இருந்தன.

இது தவிர குழந்தைகளுடன் எம்.ஜி.ஆர். சத்துணவு சாப்பிடுவது, மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது, காவல்துறை அலுவலர்கள், சாரணர்படை மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்குவது, அரசு கோப்புகளை பார்வையிடுவது, தலைமை செயலகத்தில் தேசியக்கொடியேற்றி மரியாதை செய்வது, நரிக்குறவர்களுடன் உணவருந்துவது, ஏழை பெண்களுக்கு இலவச சேலை வழங்குவது போன்ற எண்ணற்ற எம்.ஜி.ஆரின் அரிய புகைப்படங்கள் கண்காட்சியில் இடம் பெற்று இருந்தன. எம்.ஜி.ஆர். குறித்து இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறு புகைப்படங்கள் இங்கு வைக்கப்பட்டு இருந்தன.

மேலும் இந்த புகைப்பட கண்காட்சியில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. தோட்டக்கலைத்துறை சார்பில் காய், கனிகளை கொண்டு உருவாக்கப்பட்ட மயில், வண்ணத்துப்பூச்சி, பூக்களால் உருவாக்கப்பட்ட நடன பெண், குழந்தைகளுடன் அமர்ந்து எம்.ஜி.ஆர். சத்துணவு சாப்பிடுவது போன்றவை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.

இந்த கண்காட்சியை விழாவுக்கு வந்திருந்தவர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்களும் பார்த்து ரசித்தனர். இவர்களில் சிலர் அந்த அரங்கின் முன்பு தனது குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரை நிறுத்தி புகைப்படம் எடுத்துக்கொண்டனர். 

Next Story