மடேனஹள்ளி கிராமத்தில் 95 வயது தொண்டரை மேடைக்கு அழைத்து கவுரவப்படுத்திய தேவேகவுடா


மடேனஹள்ளி கிராமத்தில்  95 வயது தொண்டரை மேடைக்கு அழைத்து கவுரவப்படுத்திய தேவேகவுடா
x
தினத்தந்தி 12 Nov 2017 10:30 PM GMT (Updated: 12 Nov 2017 7:33 PM GMT)

மடேனஹள்ளி கிராமத்தில் 95 வயது தொண்டரை தேவேகவுடா மேடைக்கு அழைத்து கவுரவப்படுத்திய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

கே.எம்.தொட்டி,

மடேனஹள்ளி கிராமத்தில் 95 வயது தொண்டரை தேவேகவுடா மேடைக்கு அழைத்து கவுரவப்படுத்திய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

95 வயது முதியவர்

மண்டியா மாவட்டம் மடேனஹள்ளி கிராமத்தில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக முன்னாள் பிரதமரும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான தேவேகவுடா நேற்று வந்தார். அங்கு அவரை காண்பதற்காக ஏராளமான தொண்டர்களும், பொதுமக்களும் கூடியிருந்தனர். அப்போது அங்கு 95 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் கூட்டத்தில், கையில் பெரிய மாலையுடன் தேவேகவுடாவை நோக்கி வாழ்த்து கோ‌ஷம் எழுப்பினார்.

அவர் கூட்ட நெரிசலில் சிக்கி தள்ளாடியபடி நின்று கொண்டிருந்தார். மேலும் அவர் மேடைக்கு ஏறி தேவேகவுடாவுக்கு மாலை அணிவிக்க வேண்டும் என்றும் கூறினார். ஆனால் அந்த முதியவரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

மேடைக்கு அழைத்து கவுரவப்படுத்தினார்

இதை கவனித்த தேவேகவுடா போலீசாரிடம், அந்த முதியவரை மேடைக்கு அழைத்து வரும்படி கூறினார். அதன்பேரில் போலீசார் அந்த முதியவரை மேடைக்கு அழைத்து சென்றனர். தேவேகவுடாவைப் பார்த்து நெகிழ்ச்சி அடைந்த அந்த முதியவர் தான் கையில் வைத்திருந்த மாலையை தேவேகவுடாவுக்கு அணிவித்தார்.

பின்னர் அந்த முதியவரை தன்னுடன் அணைத்துக் கொண்ட தேவேகவுடா, அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு கவுரவப்படுத்தினார். இதையடுத்து தேவேகவுடா உங்களுக்கு என்ன குறை?, உங்களது கோரிக்கை என்ன? என்று கேட்டார். அதற்கு அவர் தான் ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தொண்டர் என்றும், அடுத்த ஆண்டு(2018) நடைபெறும் சட்டசபை தேர்தலில் கண்டிப்பாக நீங்கள்தான் வெற்றிபெறுவீர்கள் என்றும் கூறினார். அவர் கூறியதைக் கேட்டு நெகிழ்ச்சி அடைந்த தேவேகவுடா பின்னர் நிகழ்ச்சியில் பேசியதாவது:–

தொண்டர்கள் பாடுபட வேண்டும்

கர்நாடகத்தில் ஜனதா தளம்(எஸ்) கட்சியும், பா.ஜனதாவும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தபோது குமாரசாமி முதல்–மந்திரியாக இருந்தார். அவர் வெறும் 20 மாதங்கள்தான் முதல்–மந்திரியாக இருந்தார். அந்த 20 மாதங்களில் அவர் கொண்டு வந்த நலத்திட்டங்கள், செயல்படுத்திய வளர்ச்சிப் பணிகளைக் கூட சித்தராமையா இந்த 4½ ஆண்டுகளில் செய்யவில்லை.

கர்நாடகத்தில் நல்ல மாற்றமும், மக்களின் வாழ்வில் முன்னேற்றமும் ஏற்பட வேண்டும் என்றால் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) கட்சி வெற்றிபெற வேண்டும். அதற்காக இப்போதிருந்தே தொண்டர்கள் அனைவரும் பாடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story