டெங்கு ஒழிப்பு பணிகளில் ஈடுபடும் அதிகாரிகளை செயலி மூலம் கண்காணிக்கும் கலெக்டர்


டெங்கு ஒழிப்பு பணிகளில் ஈடுபடும் அதிகாரிகளை செயலி மூலம் கண்காணிக்கும் கலெக்டர்
x
தினத்தந்தி 12 Nov 2017 9:45 PM GMT (Updated: 12 Nov 2017 7:40 PM GMT)

தேனி மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு பணிகளில் ஈடுபடும் அதிகாரிகளை ‘கைசாலா’ என்ற புதிய செயலி மூலம் கலெக்டர் கண்காணித்து வருகிறார்.

உத்தமபாளையம்,

தேனி மாவட்டத்தில் 8 ஊராட்சி ஒன்றியங்கள், 6 நகராட்சிகள், 22 பேரூராட்சிகள் மற்றும் 130 கிராம ஊராட்சிகள் உள்ளன. மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. டெங்கு கொசுப்புழுக்கள் ஒழிப்பு பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் காலை 6 மணிக்கு பணியில் ஈடுபடவேண்டும் என்று கலெக்டர் வெங்கடாசலம் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் அதிகாரிகள் டெங்கு கொசுப்புழு ஒழிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சுகாதாரக்கேடு ஏற்படும் வகையில் உள்ள இடங்களை பார்வையிட்டு அந்த இடத்தின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

இந்த பணிகளில் ஈடுபட்டு வரும் அதிகாரிகளை கண்காணிப்பதற்கு ‘கைசாலா’ என்ற புதிய செயலி சுகாதாரத்துறை மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் இந்த செயலியை அதிகாரிகள் தங்களுடைய செல்போனில் பதிவிறக்கம் செய்து உள்ளனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் டெங்கு கொசுப்புழுக்கள் குறித்து ஆய்வு செய்வதை இவர்கள் படம் பிடித்து உடனே அந்த செயலி மூலம் கலெக்டருக்கு தகவல் அனுப்பி வருகின்றனர்.

அந்த படத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்யும் நேரமும் குறிப்பிடப்படுகிறது. இதன் மூலம் டெங்கு கொசுப்புழுக்கள் ஒழிப்பு பணி தீவிரமாக நடைபெறுவதற்கு ஏதுவாக உள்ளது.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது, இந்த ‘கைசாலா’ செயலி மூலம் மாவட்ட முழுவதும் டெங்கு ஒழிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மற்றும் களப்பணியாளர்கள் ஒழுங்காக ஈடுபட்டு வருகின்றார்களா? என்பதை மாவட்ட கலெக்டர் கண்காணித்து வருகிறார். இதன் மூலம் அதிகாரிகள் தொய்வு இன்றி விரைவாக செயல்படுவதால் சுகாதாரப்பணிகள் முழுமையாக நடைபெறுகிறது என்றனர்.


Next Story