சித்தராமையா தலைமையிலான ஆட்சி இன்னும் 3 மாதங்களே நீடிக்கும் எடியூரப்பா சொல்கிறார்
சித்தராமையா தலைமையிலான ஆட்சி இன்னும் 3 மாதங்களே நீடிக்கும் என்று எடியூரப்பா சொல்கிறார்.
மங்களூரு,
சித்தராமையா தலைமையிலான ஆட்சி இன்னும் 3 மாதங்களே நீடிக்கும் என்று எடியூரப்பா சொல்கிறார்.
முன்னாள் முதல்–மந்திரியும், கர்நாடக பா.ஜனதா தலைவருமான எடியூரப்பா நேற்று காலை மங்களூருவில் உள்ள தனியார் ஓட்டலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
உற்சாக வரவேற்புகர்நாடக பா.ஜனதா சார்பில் மாற்றத்திற்கான பயணத்தை தொடங்கி உள்ளேன். இந்த பயணம் மிகப்பெரிய வெற்றி அடைந்து வருகிறது. தட்சிண கன்னடா மாவட்டத்தில் இந்த பயணத்துக்கு உற்சாக வரவேற்பு இருந்தது. குறிப்பாக, பண்ட்வால், சுள்ளியா, மூடபித்ரி, மங்களூரு ஆகிய பகுதிகளில் அமோக வரவேற்பு இருந்தது. இந்த பயணம் தட்சிண கன்னடாவை தொடர்ந்து உடுப்பிக்கு சென்று அங்கிருந்து கார்வாருக்கு செல்கிறது. ஊழல்வாதி சித்தராமையாவால் மாநிலத்தில் நல்லாட்சி கொடுக்க முடியவில்லை.
அவருடைய ஆட்சி காலத்தில் அரசு நிலத்தை விடுவிப்பது, பெங்களூரு மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் சாலை அமைக்க ஒதுக்கப்பட்ட நிதியை முறைகேடு செய்தது, கோவிந்தராஜ் குறிப்பேட்டில் கூறிய குற்றச்சாட்டு, சித்தராமையா மகனின் ஊழல் என அடுக்கடுக்காக ஊழல் குற்றச்சாட்டுகள் சொல்லிக் கொண்டே போகலாம். இந்த அரசு ஊழலுக்கு அடிபணிந்து விட்டது. பெங்களூரு மாநகராட்சியில் பழுதடைந்த சாலைகளை சீரமைப்பு ஒதுக்கப்பட்ட ரூ.4.60 கோடியை அரசு முறைகேடு செய்துள்ளது. சாலை சீரமைக்கும் பணிகள் எதுவும் நடக்கவில்லை.
சி.பி.ஐ. விசாரணைக்கு...கற்பழிப்பு குற்றவாளியான வேணுகோபாலை அந்த கட்சி, கர்நாடக மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக நியமித்துள்ளது. ஊழல் தடுப்பு படையை சித்தராமையா தவறாக பயன்படுத்துகிறார். ஆனால், ஊழல் தடுப்பு படையை தான் தவறாக பயன்படுத்தவில்லை என்று சித்தராமையா கூறி வருகிறார். அவர் மீது ஊழல் தடுப்பு படையில் 30–க்கும் மேற்பட்ட புகார்கள் கொடுக்கப்பட்டன. ஆனால் இதுவரை ஒரு புகாரில் கூட வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.
மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஊழல் தடுப்பு படையில் எந்த புகார் கொடுத்தாலும், எந்த நடவடிக்கையும் எடுக்க போவதில்லை. இதனால், அந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும். அப்போது தான் உண்மை நிலவரம் தெரியவரும். கற்பழிப்பு குற்றவாளி வேணுகோபாலும், ஊழல் முதல்–மந்திரி சித்தராமையாவும் கர்நாடகத்தை பின்நோக்கி கொண்டு செல்கிறார்கள்.
சட்டம்–ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதுசித்தராமையா, தனது தலைமையிலான அரசு ஏழை–எளிய மக்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கி வருவதாக கூறி வருகிறார். ஆனால், சாம்ராஜ்நகர் மாவட்டத்தை பொறுத்தவரை பள்ளி குழந்தைகளுக்கு தரமற்ற சீருடைகளை வழங்கி ரூ.75 கோடி முறைகேடு செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் சட்டம்–ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டது. மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. போலீஸ் துறை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால், அது செயல்படாமல் உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் தட்சிண கன்னடா மாவட்டம் பதற்றமான பகுதியாகும். இங்கு கொலை சம்பவங்கள் சர்வசாதாரணமாக நடக்கின்றன. இந்து அமைப்பினர் பலர் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால், இதுகுறித்து அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் குற்றவாளிகளை பாதுகாக்க முயற்சி செய்கிறது.
3 மாதங்களே நீடிக்கும்காங்கிரஸ் தலைவர்கள் மணல் கொள்ளை அடிப்பதால், மாநில மக்கள் வீடு கட்ட மணல் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள். மாநிலத்தில் சட்டம்–ஒழுங்கு சீர்குலைந்து போனதால், போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. போதை பொருள் மாபியாக்களை இந்த அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை.
சித்தராமையா தலைமையிலான ஆட்சி இன்னும் 3 மாதங்களே நீடிக்கும். அதன்பிறகு அவர் வீட்டுக்கு தான் செல்ல வேண்டும். சித்தராமையா போன்ற ஒரு முதல்–மந்திரியை கர்நாடகம் பார்த்தது இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.