கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 5 இடங்களில் மேம்பாலம் கட்ட திட்டம்


கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 5 இடங்களில் மேம்பாலம் கட்ட திட்டம்
x
தினத்தந்தி 12 Nov 2017 10:45 PM GMT (Updated: 12 Nov 2017 8:11 PM GMT)

கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 5 இடங்களில் மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான மண் பரிசோதனை செய்யும் பணி தற்போது தொடங்கப்பட்டு உள்ளது.

துடியலூர்,

கோவை மாவட்டத்தில் முக்கிய சாலைகளில் ஒன்றாக மேட்டுப்பாளையம் சாலை விளங்குகிறது. இந்த சாலை வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் நாள்தோறும் சென்று வருகின்றன. மேலும் கோவை வழியாக மேட்டுப்பாளையம், ஊட்டி, மைசூர் செல்பவர்களும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

இருவழிச்சாலையாக இருந்த இது, 7 வருடங்களுக்கு முன்பு 4 வழிச்சாலையாக மாற்றப்பட்டது. இருப்பினும் போக்குவரத்து நெரிசல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. எனவே போக்குவரத்து நெரிசலை குறைக்க நெடுஞ்சாலை துறை சார்பில் கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபா காலனி சந்திப்பு, கவுண்டம்பாளையம், ஜி.என்.மில்ஸ், துடியலூர் சந்திப்பு, பெரியநாயக்கன்பாளையம் ஆகிய 5 இடங்களில் மேம்பாலங்கள் கட்ட மத்திய அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டன.

அதில் தற்போது ஜி.என்.மில்ஸ், கவுண்டம்பாளையம் ஆகிய 2 இடங்களில் மட்டும் மேம்பாலங்கள் கட்ட ஒப்புதல் பெறப்பட்டு நெடுஞ்சாலை துறை அதிகாரிகளால் திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் 5 இடங்களில் மேம்பாலங்கள் கட்ட பரிந்துரை செய்யப்பட்டதில் 2 இடங்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதில் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ஹவுசிங் யூனிட்டில் இருந்து ராமன கவுண்டர் பூவாத்தாள் திருமண மண்டபம் வரை சுமார் 1 கிலோ மீட்டர் வரை ரூ.54 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டப்பட உள்ளது.

2-வது மேம்பாலம் ஐ.டி.ஐ. பகுதியில் இருந்து மார்ட்டின் ஓமியோபதி கல்லூரி வரை சுமார் 7.5 மீட்டர் தூரம் வரை ரூ.25 கோடி மதிப்பிலும் கட்டப்பட உள்ளது. இந்த 2 மேம்பாலங்கள் கட்டுவதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.

தற்போது ஜி.என்.மில்ஸ் பகுதியில் மேம்பாலம் கட்ட மண் பரிசோதனை நடைபெற்று வருகிறது. இந்த பரிசோதனை 2 நாட்களாக நடைபெறுகிறது. பரிசோதனை முடிவுகள் வந்த பின் 3 மாதங்களுக்குள் மேம்பாலம் கட்டுவதற்கான பணிகள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்க செயலாளர் தேவேந்திரன் கூறியதாவது:-

கோவை- மேட்டுப்பாளையம் சாலையை 4 வழிச்சாலையாக மாற்றுவதற்காக 850 மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. தற்போது தொண்டு நிறுவனங்கள் மூலம் இந்த சாலையோரம் ஏராளமான மரக்கன்றுகள் நடவு செய்யப்படுகின்றன.

இந்த சாலையை உலக தரம் வாய்ந்த சாலையாக மாற்ற நெடுஞ்சாலை துறை சுமார் ரூ.850 கோடி மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பியது.

ஆனால் தற்போது 2 பாலங்கள் கட்டுவதற்காக மண் பரிசோதனை நடைபெற்றுவருகிறது. மற்ற 3 இடங்களிலும் உடனடியாக பாலங்கள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க தீர்வாக அமையும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story