குத்தகை பணத்தை கேட்ட முதியவர் அடித்துக்கொலை செங்கல்சூளை உரிமையாளர் கைது


குத்தகை பணத்தை கேட்ட முதியவர் அடித்துக்கொலை செங்கல்சூளை உரிமையாளர் கைது
x
தினத்தந்தி 12 Nov 2017 8:30 PM GMT (Updated: 2017-11-13T01:46:12+05:30)

சிக்கமகளூரு அருகே குத்தகை பணத்தை கேட்ட முதியவரை அடித்துக் கொலை செய்த செங்கல்சூளை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

சிக்கமகளூரு,

சிக்கமகளூரு அருகே குத்தகை பணத்தை கேட்ட முதியவரை அடித்துக் கொலை செய்த செங்கல்சூளை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

தகராறு

சிக்கமகளூரு அருகே உள்ள தம்மதள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சகுனி ஷெட்டி(வயது 65). இவர் தனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை அதே கிராமத்தை சேர்ந்த கருனி(38) என்பவருக்கு குத்தகைக்கு கொடுத்திருந்தார். அந்த நிலத்தில் கருனி, செங்கல்சூளை அமைத்திருந்தார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சகுனி ஷெட்டிக்கு குத்தகை பணத்தை கருனி கொடுக்கவில்லை என தெரிகிறது.

இதுகுறித்து சகுனி ஷெட்டி கருனியிடம், பலமுறை கேட்டும் அவர் பணத்தை கொடுக்கவில்லை. மேலும் சரியாக பதிலும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

அடித்துக் கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் கருனியிடம் குத்தகை பணத்தை கேட்பதற்காக சகுனி ஷெட்டி அவருடைய செங்கல் சூளைக்கு சென்றுள்ளார். அப்போதும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த கருனி அங்கு கிடந்த உருட்டுக் கட்டையால் சகுனி ஷெட்டியை சரமாரியாக அடித்து உள்ளார். இதில் படுகாயமடைந்த சகுனி ஷெட்டி, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப்பகுதி மக்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக சிக்கமகளூரு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே, சகுனி ஷெட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

செங்கல்சூளை உரிமையாளர் கைது

இதுபற்றிய தகவல் அறிந்ததும் சிக்கமகளூரு புறநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர். விசாரணையில், குத்தகை பணத்தை கேட்டபோது ஏற்பட்ட தகராறில், சகுனி ஷெட்டியை கருனி அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து சிக்கமகளூரு புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செங்கல்சூளை உரிமையாளர் கருனியை கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story