சென்னிமலை–ஊத்துக்குளி வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்த அரசு பஸ்சை நிறுத்தியதால் மற்றொரு பஸ்சை சிறைபிடித்த பொதுமக்கள்


சென்னிமலை–ஊத்துக்குளி வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்த அரசு பஸ்சை நிறுத்தியதால் மற்றொரு பஸ்சை சிறைபிடித்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 12 Nov 2017 9:45 PM GMT (Updated: 2017-11-13T01:57:19+05:30)

சென்னிமலை–ஊத்துக்குளி வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்த ஒரு அரசு பஸ்சை நிறுத்தியதால் மற்றொரு அரசு பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்தார்கள்.

சென்னிமலை,

சென்னிமலையில் இருந்து ஊத்துக்குளிக்கு அய்யம்பாளையம், ராமலிங்கபுரம், ஒரத்துப்பாளையம், கொடுமணல் மற்றும் ஆலமரம் வழியாக தினமும் சி–2 மற்றும் சி–12 ஆகிய அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில், சி–2 என்ற பஸ் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த பஸ் தினமும் காலை 6.20 மணி, 9.40 மணி, பகல் 12.50 மணி, மாலை 3.10 மணி மற்றும் மாலை 6.15 மணிக்கு சென்னிமலையில் இருந்து புறப்பட்டு ராமலிங்கபுரம், ஒரத்துப்பாளையம், கொடுமணல் உள்பட பல கிராமங்கள் வழியாக ஊத்துக்குளிக்கு செல்லும். இந்த பஸ்சை சென்னிமலை செல்லும் நெசவாளர்கள் மற்றும் ஊத்துக்குளி பகுதியில் உள்ள பனியன் நிறுவனங்களுக்கு செல்லும் தொழிலாளர்களும் பயன்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில், நேற்று சி–2 பஸ் கொடுமுடி பஸ் நிறுத்தம் வழியாக வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கொடுமணல் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை 10.30 மணி அளவில் ஊத்துக்குளியில் இருந்து கொடுமணல் வழியாக சென்னிமலைக்கு வந்த மற்றொரு அரசு டவுன் பஸ்சான சி–12–யை தடுத்து நிறுத்தி சிறை பிடித்தனர். அப்போது அந்த பஸ்சின் டிரைவர், கண்டக்டர் பொதுமக்களிடம், ‘ஏன் பஸ்சை தடுத்து நிறுத்தினீர்கள்? எனக்கேட்டனர். இதனால் பொதுமக்களுக்கும், டிரைவர், கண்டக்டர் இடையேயும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அதற்கு பொதுமக்கள், ‘கடந்த சில நாட்களாக சி–2 பஸ்சில் பயணிகள் கூட்டம் குறைந்து விட்டது என கூறி தினமும் ஓரிரு முறையும், ஞாயிற்றுக்கிழமைகளில் முற்றிலுமாகவும் சி–2 அரசு பஸ்சை நிறுத்திவிட்டார்கள். இதனால் நெசவாளர்கள், பனியன் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எனவே சென்னிமலை–ஊத்துக்குளி வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்த சி–2 அரசு பஸ்சை மீண்டும் இயக்க அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என்றனர்.

இதுகுறித்து டிரைவரும், கண்டக்டரும் காங்கேயம் கிளை அதிகாரிகளுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார்கள். அதைத்தொடர்ந்து அதிகாரிகள் பொதுமக்களிடம் பேசினார்கள்.

அப்போது அவர்கள் கூறும்போது, ‘சி–2 அரசு பஸ் இனிமேல் தொடர்ந்து இயக்கப்படும்’ என்று உறுதி அளித்தனர். இதை ஏற்றுக்கொண்ட பொதுமக்களை பஸ்சை விடுவித்து பகல் 11.30 மணி அளவில் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன்பின்னர் அந்த பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்னிமலைக்கு சென்றது.

இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story