பெருந்துறை அருகே குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் வெளியேற்றியதை கண்டித்து ஓட்டல்களை பொதுமக்கள் முற்றுகை


பெருந்துறை அருகே குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் வெளியேற்றியதை கண்டித்து ஓட்டல்களை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 13 Nov 2017 3:45 AM IST (Updated: 13 Nov 2017 1:57 AM IST)
t-max-icont-min-icon

பெருந்துறை அருகே குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் வெளியேற்றியதை கண்டித்து ஓட்டல்களை பொதுமக்கள் முற்றுகையிட்டார்கள்.

பெருந்துறை,

கோவை–சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பெருந்துறை சோளிபாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் அங்கீகாரம் பெற்ற 2 ஓட்டல்கள் உள்ளன. இந்த ஓட்டல்கள் முன்பு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 20–க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 10 மணி அளவில் திடீரென திரண்டனர். பின்னர் ஓட்டல்களை முற்றுகையிட்டார்கள்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம், ஓட்டல் நிர்வாகிகள் அங்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது பொதுமக்கள் கூறியதாவது, ‘இந்த ஓட்டல்களில் இருந்து தினமும் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் லிட்டர் வரை கழிவுநீர் வெளியேறுகிறது. சுத்திகரிக்கப்படாமல் திறந்தவெளியில் ஓட்டலின் இடதுபுறம் உள்ள காலி இடத்தில் பாத்தி கட்டி இந்த கழிவுநீர் தேக்கப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. அதே சமயம் இந்த கழிவுநீர் ஓட்டலை தாண்டி சோளிபாளையம் குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும் வருகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே கழிவுநீரை எங்கள் பகுதிகளுக்குள் வெளியேற்றுவதை நிறுத்த வேண்டும்.’ என்றனர்.

அதற்கு ஓட்டல் நிர்வாகிகள், ‘ஓட்டல் கழிவுநீரை சோளிபாளையம் பகுதிக்குள் விடமாட்டோம். ஓட்டல் கழிவுநீரை தங்கள் எல்லைக்குள் தேங்கி கொள்வோம்’ என்றனர். அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


Next Story