வேல்ராம்பேட் ஏரியை சுற்றுலா தலமாக்க நடவடிக்கை கவர்னர் கிரண்பெடி அறிவிப்பு
வேல்ராம்பேட் ஏரியை சுற்றுலா தலமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கவர்னர் கிரண்பெடி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி,
கவர்னர் கிரண்பெடி புதுச்சேரியில் இருக்கும் நேரத்தில் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றார். அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேல்ராம்பட்டு ஏரிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு காணப்பட்ட ஆக்கிமிப்புகளை அகற்றி ஏரியை மீட்டு அதனை சுற்றி வேலி அமைக்க நடவடிக்கை எடுத்தார்.
அங்கு குப்பைகள் கொட்டி ஏரி சீரழிக்கப்படுவதையும் தடுத்தார். இதனால் தற்போது பெய்த மழையால் ஏரியில் அதிகளவு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்தநிலையில் நேற்று காலை கவர்னர் மாளிகையில் இருந்து வேல்ராம்பட்டு ஏரிக்கு கவர்னர் கிரண்பெடி சைக்கிளில் சென்றார். ஏரியில் அதிக அளவில் தண்ணீர் தேங்கி இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைந்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
ஏரி அழகாக காட்சியளிப்பதை பார்க்கும்போது மேலும் பல அர்த்தமுள்ள பணிகளை மேற்கொள்ள ஊக்கமளிக்கின்றது. ஏரியை உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்திற்காக பயன்படுத்த வேண்டும். இதனை சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அப்போது தான் தற்போது இருப்பதை போல் அழகாக ஏரியை பராமரிக்க முடியும். இதற்காக மக்கள் பிரதிநிதி அடங்கிய குழுவை அமைக்க வேண்டும்.
இந்த குழு சேதமடைந்த வேலிகளை பராமரிப்பது, தோட்டம் அமைப்பது, நீரை தூய்மையாக வைத்திருப்பது போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். தற்போதைக்கு நகராட்சி ஆணையர் தலைமையில் ஏரிக்கு அருகில் உள்ள கல்லூரி மாணவர்கள் ஆயிரம் பேரை சேர்த்து குழு அமைத்து தொடர்ந்து 3 நாட்கள் ஏரி பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு கவர்னர் கிரண்பெடி கூறினார்.
இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சத்தியமூர்த்தி, புதுச்சேரி நகராட்சி ஆணையர் கணேசன், செயற்பொறியாளர்கள் தாமரை புகழேனி, போலீஸ் சூப்பிரண்டு அப்துல் ரகீம் மற்றும் பலர் உடனிருந்தனர்.