புதுவையில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவி; நாராயணசாமி அறிவிப்பு


புதுவையில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவி; நாராயணசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 12 Nov 2017 11:45 PM GMT (Updated: 12 Nov 2017 8:39 PM GMT)

புதுவையில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அடுத்த வாரம் முதல் நிவாரண உதவி வழங்கப்படும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

புதுச்சேரி முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பாக காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி அழைத்துப் பேசினார். அப்போது புகையிலை, சிகரெட் தவிர பிற பொருட்களுக்கு 18 சதவீதத்திற்கு மேல் வரி இருக்கக்கூடாது என்பதை அமல்படுத்த உறுதி கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார். அதன் அடிப்படையில், ஏழை மக்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு 18, 12, 5 சதவீதம் என வரி இருக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதினேன்.

தற்போது நடந்த சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் கூட்டத்தில் நானும், காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களும் வலியுறுத்தியதன் அடிப்படையில் பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டு உள்ளது. இது காங்கிரசுக்கு கிடைத்த வெற்றி. ஜி.எஸ்.டி. கவுன்சிலில் உறுப்பினர்களாக உள்ள காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. அல்லாத பிற கட்சிகளைச் சேர்ந்தவர்கள்தான் இந்த வரி குறைப்பிற்கு காரணம்.

புதுச்சேரியில் கனமழை பெய்தபோது அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும், அரசு அதிகாரிகளும் தாழ்வான பகுதிகளில் தேங்கிய நீரை ராட்சத பம்புகள் மூலம் இறைத்து அகற்றினர். உப்பனாறு வாய்க்கால் ரூ.1 கோடியே 20 லட்சம் செலவில் தூர்வாரப்பட்டுள்ளது. மேலும் பல வாய்க்கால்களும் தூர்வாரப்பட்டுள்ளன. இதனால் புதுச்சேரியில் பல ஏரிகள் நிரம்பியுள்ளன.

புதுச்சேரியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் பார்வையிட்டு நடவடிக்கை எடுத்தனர். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் படுக்கை வசதியை அதிகப்படுத்தி, கூடுதல் மருந்துகள் வரவழைக்கப்பட்டுள்ளன. ரத்த அணு மாற்று எந்திரம் 24 மணிநேரமும் இயங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஏற்கனவே வறட்சியின் போது பாதிக்கப்பட்ட புதுவை விவசாயிகளுக்கு மத்திய அரசு ரூ.18 கோடி நிவாரண உதவி வழங்கியுள்ளது. ஏற்கனவே எடுத்த கணக்கெடுப்பின் அடிப்படையில் அடுத்த வாரத்தில் இருந்து விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்கப்படும்.

அரசு சார்பில் பயிர்காப்பீடு செய்திருந்த நிலையில் வறட்சியால் பயிர்கள் பாதிக்கப்பட்டதை அடுத்து இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ரூ.7 கோடியே 63 லட்சம் இன்சூரன்ஸ் தொகையை வழங்க முன்வந்துள்ளன. அந்த பணமும் இந்த வாரத்தில் கொடுக்கப்படும். 70 சதவீதம் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.15 ஆயிரமும், முழுவதும் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ரூ.24 ஆயிரமும் இன்சூரன்ஸ் தொகை கிடைக்கும். இதன் மூலம் விவசாயிகளுக்கு 2 சலுகைகள் கிடைக்கும்.

இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

மேலும் அவர் கூறும் போது, வருமான வரித்துறையை மத்திய அரசு, தனக்கு எதிரானவர்கள் மீது ஏவி விடுவதாக நான் கூறியது பொதுவான கருத்து. புதுச்சேரியை பொறுத்தவரை கவர்னர் தனக்கு வரும் புகாரை அமைச்சர்களுக்குத்தான் அனுப்பி வைக்க வேண்டும். அதை விடுத்து நேரடியாக உத்தரவு போடும் அதிகாரம் கவர்னருக்கு கிடையாது. கவர்னர் மாளிகையில் வேலை செய்யும் 64 பேர் வேறு துறைகளில் சம்பளம் பெற்றுக்கொண்டு பணிபுரிந்து வருகின்றனர். இதை சொன்னால் பூதாகரமாக வெடிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story