மாணவர்கள் உருவாக்கிய புற்றுநோய் ஸ்கேனர்


மாணவர்கள் உருவாக்கிய புற்றுநோய் ஸ்கேனர்
x
தினத்தந்தி 13 Nov 2017 1:33 PM IST (Updated: 13 Nov 2017 1:32 PM IST)
t-max-icont-min-icon

கனடா மாணவ ஆராய்ச்சியாளர்கள் சரும புற்றுநோயைக் கண்டுபிடிக்க எளிமையான ஸ்கேனர் கருவியை வடிவமைத்துள்ளனர்.

ஏ.டி.எம். கார்டு அளவில் உள்ள பெட்டி போன்ற சாதனம் தோல்பகுதியை வெப்பஅலை வரைபடம் மூலம் படம் பிடிக்கிறது. அப்போது புற்றுக்கட்டி போன்ற கருங்கட்டிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்துச் சொல்கிறது.

பொதுவாக தோல் புற்றுநோய்க்கு உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சுமார் 10 ஆயிரம் பேர் பலியாகிறார்களாம். மற்ற புற்றுநோய்களைப்போல, சருமப் புற்றுக்கட்டிகளை ஆரம்பத்திலேயே எளிதாக கண்டுபிடிக்க முடிவதில்லை. இதுவே அதிகப்படியான இறப்புகளுக்கு காரணமாக அமைந்தது.

தற்போது சருமப் புற்றுக்கட்டிகளை அடையாளம் காணும் வகையில் ஸ்கேன் (sKan) கருவியை வடிவமைத்துள்ளனர் மேக் மாஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள். புற்றுக்கட்டிகள் மற்ற செல்களைவிட வேகமாக வளர்ச்சிதை மாற்றம் அடைந்து பெருகுவதால் ஏற்படும் வெப்பஅலைகளை அடிப்படையாக வைத்து இந்தக் கருவி புற்று செல்களை அடையாளம் காண்கிறது. முதலில் சந்தேகத்திற்கிடமான பகுதியை பனிக்கட்டியால் உறையச் செய்துவிட்டு இந்த கருவியை அந்த மேற்பரப்பில் நகர்த்துவதன் மூலம் எளிமையாக புற்றுநோய் பரிசோதனை செய்யலாம்.

மாணவர்களுக்கான கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் ஒரு போட்டியில், ‘சர்வதேச ஜேம்ஸ் டைசன் விருது’க்கு இந்தக் கருவி தேர்வு செய்யப்பட்டது. கையடக்க கருவியான இது 770 அமெரிக்க டாலர் (சுமார் 50 ஆயிரம் ரூபாய்) விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. 

Next Story