குடிநீர் கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த கிராம மக்கள்
குடிநீர் கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் அளித்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், சீரான குடிநீர் வினியோகம் வழங்கக்கோரி மனு கொடுக்க கிராம மக்கள் ஏராளமானோர் திரண்டனர். அந்த வகையில், ஆத்தூர் தாலுகா சீவல்சரகு ஊராட்சி வேலக்கவுண்டன்பட்டி கிராம மக்கள் கலெக்டர் டி.ஜி.வினயிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருப்பதாவது:–
எங்கள் கிராமத்துக்கு ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இதற்கிடையே மின் மோட்டாரில் பழுது ஏற்பட்டதால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. மற்றொரு ஆழ்துளை கிணறு தூர்ந்துபோய்விட்டது. தற்போது குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது.
வேறு இடத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க அதிகாரிகள் முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துகிறோம். இந்த அவல நிலை நீங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் எங்களுடைய ரேஷன் கார்டுகளை திரும்ப ஒப்படைப்போம்.
இவ்வாறு அவர்கள் கூறி இருந்தனர்.
இதே போல, திண்டுக்கல் அருகே உள்ள பெரியகோட்டையை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், ‘எங்கள் பகுதியில் கடந்த 9 மாதங்களாக சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுதொடர்பாக ஊராட்சி நிர்வாகம், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுத்தும் பயனில்லை’ என குறிப்பிட்டு இருந்தனர்.
நிலக்கோட்டை அருகே உள்ள தும்மலப்பட்டி பகுதியை சேர்ந்த கிராம மக்கள் கொடுத்த மனுவில், ‘மின் மோட்டார் பழுது காரணமாக ஒரு மாதமாக குடிநீரின்றி சிரமப்பட்டு வருகிறோம். எங்களுக்கு குடிநீர் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்து இருந்தனர். இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார்.