மாசு ஏற்படுத்தும் நூற்பாலை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தாசில்தாரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்


மாசு ஏற்படுத்தும் நூற்பாலை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தாசில்தாரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்
x
தினத்தந்தி 14 Nov 2017 4:15 AM IST (Updated: 14 Nov 2017 12:27 AM IST)
t-max-icont-min-icon

அந்தியூர் அருகே மாசு ஏற்படுத்தும் நூற்பாலை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தாசில்தாரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

அந்தியூர்,

அந்தியூர் அருகே தவுட்டுப்பாளையத்தில் ஒரு நூற்பாலை உள்ளது. இந்த நூற்பாலைகளில் இருந்து பஞ்சு துகள்கள் வெளியேறி அங்குள்ள குடியிருப்பு பகுதியில் படிந்து மாசு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. எனவே மாசு ஏற்படுத்தும் நூற்பாலை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் மனு அளித்தனர்.

இந்த நிலையில் தவுட்டுப்பாளையத்தில் உள்ள நூற்பாலையை ஆய்வு செய்வதற்காக அந்தியூர் தாசில்தார் செல்லையா நேற்று வந்தார். இதுபற்றி அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று மாலை 6.30 அணி அளவில் ஒன்று திரண்டு வந்து தாசில்தாரை முற்றுகையிட்டனர்.

அப்போது தாசில்தாரிடம் பொதுமக்கள் கூறுகையில், ‘நூற்பாலையில் இருந்து வெளியேறும் பஞ்சு துகள்கள் எங்களுடைய வீடுகளில் படிந்து உள்ளது. இந்த பஞ்சு துகள்களால் இங்குள்ளவர்களுக்கு சளி, இருமல், தும்மல் போன்ற நோய் தொந்தரவுகள் உள்ளன. எனவே மாசு ஏற்படுத்தும் நூற்பாலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர். அதுமட்டுமின்றி பஞ்சு துகள்களால் ஏற்பட்டு உள்ள மாசுகளை வந்து பார்வையிட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர். இதையடுத்து தாசில்தார் செல்லையா அந்த பகுதியில் உள்ள 10–க்கும் மேற்பட்ட வீடுகளை பார்வையிட்டார்.

பின்னர் பொதுமக்களிடம் அவர் கூறுகையில், ‘இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றார். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் இரவு 7 மணி அளவில் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story