ஜி.எஸ்.டி வரி குறைக்கப்படாததால் பெண்கள் வேலை இழக்கும் நிலை மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை


ஜி.எஸ்.டி வரி குறைக்கப்படாததால் பெண்கள் வேலை இழக்கும் நிலை மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x
தினத்தந்தி 14 Nov 2017 3:45 AM IST (Updated: 14 Nov 2017 1:26 AM IST)
t-max-icont-min-icon

தீப்பெட்டி உற்பத்திக்கு ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்படாததால், பெண்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்,

விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பட்டாசு தொழில் போன்று தீப்பெட்டி தொழிலும் நடைபெற்று வருகிறது. இதில் லட்சக்கணக்கான ஏழை, எளிய மக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பை பெறுகின்றனர். குறிப்பாக கிராம பெண்களின் வாழ்வாதாரமாக திகழ்கிறது தீப்பெட்டி தொழில். கிராம பெண்களின் பொருளாதார மேம்பாடு குடிசை தொழிலான தீப்பெட்டி உற்பத்தியை பொருத்து தான் அமைந்துள்ளது.

இந்த தொழிலில் கையினால் செய்யும் தீப்பெட்டிக்கு முழுமையாக வரி விலக்கு முன்பு அளிக்கப்பட்டு இருந்தது. பின்பு எந்திரமயமாக்கப்பட்ட தீப்பெட்டி உற்பத்திக்கு 5 சதவீத வரி விதிப்பும், முழுமையாக எந்திரமயமாகக்கப்பட்ட ஆலைகள் மூலம் தயாரிக்கப்படும் தீப்பெட்டிக்கு 12 சதவீத வரி விதிப்பும், மதிப்பு கூடுதல் வரி 2 சதவீதமும் விதிக்கப்பட்டு இருந்தது. ஜி.எஸ்.டி. அமுலுக்கு வந்த பின்னர் கையினால் செய்யப்படும் தீப்பெட்டி உற்பத்திக்கு 5 சதவீத வரி விதிப்பும், எந்திரமயமாக்கப்பட்ட மற்றும் முழுமையாக எந்திரமயமாக்கப்பட்ட தீப்பெட்டி உற்பத்திக்கு 18 சதவீத வரி விதிப்பும் அமுலுக்கு வந்துள்ளது. இதனால் தீப்பெட்டி உற்பத்தி தொழில் பெரும் அளவு பாதிப்பு அடைந்துள்ளது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு வேலை வாய்ப்பு அளித்து வரும் குடிசை தீப்பெட்டி தொழில் முற்றிலுமாக நலிவடையும் நிலையை அடைந்துள்ளது.

சமீபத்தில் ஜி.எஸ்.டி.குழு பல்வேறு பொருட்களுக்கு வரியை குறைத்துள்ளது. ஆனால் தீப்பெட்டி தொழிலுக்கு எவ்வித சலுகையும் அளிக்கப்படவில்லை. எனவே தீப்பெட்டி உற்பத்தி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள ஏழை, எளிய மக்களின் நலன் கருதி தீப்பெட்டி உற்பத்திக்கு ஜி.எஸ்.டி. வரியை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story