சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோரை நியமன எம்.எல்.ஏ.க்களாக அங்கீரிக்க இயலாது; சபாநாயகர் வைத்திலிங்கம் திட்டவட்டம்


சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோரை நியமன எம்.எல்.ஏ.க்களாக அங்கீரிக்க இயலாது; சபாநாயகர் வைத்திலிங்கம் திட்டவட்டம்
x
தினத்தந்தி 13 Nov 2017 11:30 PM GMT (Updated: 13 Nov 2017 8:36 PM GMT)

சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோரை நியமன எம்.எல்.ஏ.க்களாக அங்கீகரிக்க இயலாது என்று புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுவை சட்டமன்றத்துக்கு 30 எம்.எல்.ஏ.க்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்துக்கொள்ளலாம். இந்த பதவிக்கு பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகளான சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோரை நியமித்துள்ளதாக மத்திய உள்துறை கடந்த ஜூலை மாதம் 3–ந் தேதி புதுவை அரசுக்கு ஆணை அனுப்பியது.

ஆனால், அவர்கள் 3 பேருக்கும் சபாநாயகர் வைத்திலிங்கம் பதவிப்பிரமாணம் செய்துவைக்க காலதாமதம் செய்தார். இதனால், ஜூலை 4–ந் தேதி இரவோடு இரவாக நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு கவர்னர் கிரண்பெடி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். மத்திய அரசு மற்றும் கவர்னரின் செயலை கண்டித்து புதுவை மாநிலத்தில் முழுஅடைப்பு போராட்டம் நடந்தது.

இதற்கிடையே தன்னால் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்ட நியமன எம்.எல்.ஏ.க்களை அங்கீகரிக்கக்கோரி சபாநாயகருக்கு தனது செயலாளர் மூலம் ஜூலை 10–ந் தேதி கவர்னர் கடிதம் அனுப்பினார். ஆனால் அதை சபாநாயகர் நிராகரித்துவிட்டார்.

அதன்பின் சாமிநாதன் உள்ளிட்ட 3 பேரும் தங்களை அங்கீகரிக்கக்கோரி சட்டசபை செயலாளரிடம் கடிதம் கொடுத்தனர். ஆனால் அவர்களை அங்கீகரிக்க முடியாது என்று சட்டமன்ற செயலகம் மூலம் ஜூலை மாதம் 27–ந் தேதி கடிதம் அனுப்பப்பட்டது. இதுகுறித்து நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும் மத்திய உள்துறை அமைச்சகத்தில் புகார் செய்தனர்.

இந்தநிலையில் நியமன எம்.எல்.ஏ.க்களை அங்கீகரிக்கக்கூடாது என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயவேணி, அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் ஆகியோர் சபாநாயகரிடம் மனு கொடுத்தனர். முதல்–அமைச்சரின் பாராளுமன்ற செயலாளரான லட்சுமிநாராயணனும் இந்த நியமனத்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

தற்போதைய சூழ்நிலையில் சபாநாயகர் வைத்திலிங்கத்தின் உத்தரவுப்படி சட்டசபை செயலாளர் வின்சென்ட்ராயர் நியமன எம்.எல்.ஏ.க்களாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:–

புதுவை யூனியன் பிரதேச சட்ட விதிப்படி உங்களது நியமனம் தொடர்பான உத்தரவு உரிய அங்கீகாரம் பெற்றவரிடம் இருந்து வரவில்லை. இத்தகைய நிலையில் கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தாலும் தங்களை எம்.எல்.ஏ.க்களாக அங்கீகரிக்க இயலாது.

எனவே தங்களது கோரிக்கைகள் அனைத்தையும் சபாநாயகர் வைத்திலிங்கம் நிராகரித்துள்ளார்.

இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சபாநாயகரின் இந்த நடவடிக்கையை அடுத்து வருகிற 23–ந் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத்தில் கலந்துகொள்ள நியமன எம்.எல்.ஏ.க்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பது உறுதியாகி உள்ளது.


Next Story