முறையான அனுமதி பெறப்பட்டுள்ளதா? சரிதா நாயர் தொடங்கும் நிறுவனத்துக்கு எதிராக பரபரப்பு புகார்


முறையான அனுமதி பெறப்பட்டுள்ளதா? சரிதா நாயர் தொடங்கும் நிறுவனத்துக்கு எதிராக பரபரப்பு புகார்
x
தினத்தந்தி 14 Nov 2017 4:30 AM IST (Updated: 14 Nov 2017 2:39 AM IST)
t-max-icont-min-icon

தக்கலையில் சரிதாநாயர் தொடங்கும் நிறுவனத்துக்கு எதிராக போலீஸ் உதவி சூப்பிரண்டு அலுவலகத்தில் காங்கிரசார் பரபரப்பு புகார் அளித்துள்ளனர்.

தக்கலை,

கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய சோலார் பேனல் (சூரியஒளி தகடு) மோசடி வழக்கில் சிக்கிய சரிதா நாயர், குமரி மாவட்டம் தக்கலை பகுதியில் காகித தட்டு, கப் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை தொடங்கி உள்ளார்.

இந்த நிலையில் அந்த நிறுவனத்துக்கு முறையான அனுமதி பெறப்பட்டுள்ளதா? என்று விசாரிக்க கோரி கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியை சேர்ந்த இளைஞர் காங்கிரசார் தக்கலை உதவி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து பரபரப்பு புகார் மனுவை கொடுத்துள்ளனர்.

பாராளுமன்ற தொகுதிக்கான இளைஞர் காங்கிரஸ் தலைவர் லாரன்ஸ் தலைமையில், மேற்கு மாவட்ட செயலாளர் ஜாண் இக்னேசியஸ், நகர தலைவர் ஹனுகுமார், ஜோன்ஸ் இம்மானுவேல் உள்பட நிர்வாகிகள் திரண்டு வந்து மனுவை அளித்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தக்கலை கொல்லன்விளை பகுதியிலும், கொல்லக்குடி முக்கு பகுதியிலும் தனியாருக்கு சொந்தமான 2 கடைகளை வாடகைக்கு எடுத்து காகித கப், காகித தட்டு தயாரிக்கும் நிறுவனம் என்று கூறி சிலரை அங்கு வேலைக்கும் அமர்த்தி உள்ளனர். அந்த நிறுவனத்தை கேரள மாநிலத்தைச் சேர்ந்த சரிதா நாயர், பாச்சலூர் பகுதியைச் சேர்ந்த வினு கிரிஷ் மற்றும் 20 பேர் சேர்ந்து நடத்தி வருகின்றனர்.

தற்போது அந்த நிறுவனத்தில் எந்த வேலையும் நடைபெறுவது இல்லை. எனவே நிறுவனம் அனுமதி பெறப்பட்டு தொடங்கப்பட்டு இருக்கிறதா? என்றும் தெரியவில்லை. பொருட்கள் தயாரிப்பும் நடைபெறவில்லை. காகித கப் தயாரிப்பு நிறுவனம் எனக்கூறி ஏமாற்றும் நோக்கத்தில் செயல்படுகிறதோ? எனவும் தெரியவில்லை.

கேரள மாநிலத்தில் குற்றப்பின்னணி கொண்டவர்களின் அடைக்கலத்திற்கு குமரி மாவட்டத்தை அனுமதிக்க கூடாது. எனவே அது குறித்து விசாரிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

Next Story