கார் மோதி மாணவி படுகாயம் வேகத்தடை அமைக்கக்கோரி சாலைமறியல்


கார் மோதி மாணவி படுகாயம் வேகத்தடை அமைக்கக்கோரி சாலைமறியல்
x
தினத்தந்தி 14 Nov 2017 4:30 AM IST (Updated: 14 Nov 2017 2:43 AM IST)
t-max-icont-min-icon

அறந்தாங்கி அருகே சைக்கிள் மீது கார் மோதியதில் மாணவி ஒருவர் படுகாயம் அடைந்தார். விபத்து நடந்த இடத்தில் வேகத்தடை அமைக்க வலியுறுத்தி பள்ளி மாணவ-மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அறந்தாங்கி,

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள குரும்பூரை சேர்ந்தவர் ஆறு முகம். இவருடைய மகள் மாதவி (வயது 16). இவர் அறந்தாங்கி சிதம்பர விடுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இந்நிலையில் மாதவி வழக்கம்போல நேற்று காலை தனது வீட்டில் இருந்து சைக்கிளில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார்.

அவர் பள்ளி அருகே புதுக்கோட்டை - அறந்தாங்கி சாலையில் சென்றபோது அவருக்கு பின்னால் வந்த கார் அவர் ஓட்டி வந்த சைக்கிள் மீது மோதியது.

இதில் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட மாதவி படுகாயமடைந்தார். இதைக் கண்ட அந்த வழியாக சென்றவர்கள் மாதவியை மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் அறந்தாங்கி- புதுக்கோட்டை சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும், பள்ளிக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அறந்தாங்கி - புதுக்கோட்டை சாலையில் அப்பள்ளி மாணவ-மாணவிகள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சாலைமறியலில் ஈடுபட்ட மாணவ-மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story