வண்டலூர் உயிரியல் பூங்காவில் ‘மாலா’ என்ற பெண் சிங்கத்துக்கு, ஆண் சிங்க குட்டி இறந்து பிறந்தது


வண்டலூர் உயிரியல் பூங்காவில் ‘மாலா’ என்ற பெண் சிங்கத்துக்கு, ஆண் சிங்க குட்டி இறந்து பிறந்தது
x
தினத்தந்தி 13 Nov 2017 10:43 PM GMT (Updated: 13 Nov 2017 10:43 PM GMT)

வண்டலூர் உயிரியல் பூங்காவில், ‘மாலா’ என்ற பெண் சிங்கத்துக்கு, ஆண் சிங்க குட்டி இறந்து பிறந்தது.

வண்டலூர்,

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பல ஆண்டுகளாக சிங்கங்களை பராமரித்து இனப்பெருக்கம் செய்து வருகிறது. தற்போது பூங்காவில் 15 சிங்கங்கள் உள்ளன. இவற்றில் ‘மாலா’ என்ற 6 வயது பெண் சிங்கம், 9 வயது சிவா என்ற சிங்கத்துடன் இணை சேர்ந்ததால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பம் தரித்தது.

நேற்று காலை 9.30 மணியளவில் பெண் சிங்கம் ‘மாலா’, ஆண் சிங்க குட்டியை இறந்த நிலையிலே ஈன்றது. பெண் சிங்கம் ‘மாலா’வுக்கு இதுவே முதல் பிரசவம் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இது குறித்து பூங்கா உயர் அதிகாரி கூறியதாவது:–

பெண் சிங்கம், ‘மாலா’ கர்ப்பம் தரித்த பிறகு பூங்கா மருத்துவ குழுவினர் அதை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அதன் அறையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு அதன் மூலம் பூங்கா ஊழியர்களும் கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை அந்த பெண் சிங்கத்துக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனே மருத்துவர்கள் சென்று பார்த்த போது, குட்டி ஈனும் போது முதலில் தலை வெளியே வருவதற்கு மாறாக கால்கள் முதலில் வெளியே வந்ததால் அதற்கு பிறந்த ஆண் சிங்க குட்டி இறந்துவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த 5–ந் தேதி வண்டலூர் பூங்காவில் உத்ரா என்ற 4 வயது பெண் வங்கப்புலி, 4 புலி குட்டிகளை ஈன்றது. அது தனது குட்டிகளை வாயால் கவ்விக்கொண்டு செல்லும் போது அதனுடைய பற்கள் புலி குட்டிகளின் கழுத்தில் பதிந்து பலத்த காயம் அடைந்ததால் 4 புலி குட்டிகளும் பிறந்த சில மணி நேரத்திலேயே பரிதாபமாக இறந்தது குறிப்பிடத்தக்கது.

அந்த சோகம் மறைவதற்குள் தற்போது பெண் சிங்கம் ‘மாலா’வுக்கு ஆண் சிங்க குட்டி இறந்த நிலையில் பிறந்தது பூங்கா ஊழியர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story