வீடு, சுற்றுப்புறங்களை தூய்மையாக வைக்காவிட்டால் நடவடிக்கை


வீடு, சுற்றுப்புறங்களை தூய்மையாக வைக்காவிட்டால் நடவடிக்கை
x
தினத்தந்தி 13 Nov 2017 11:03 PM GMT (Updated: 13 Nov 2017 11:03 PM GMT)

டெங்கு காய்ச்சலை முற்றிலும் தடுக்கும் வகையில் வீடு, சுற்றுப்புறங்களை தூய்மையாக வைக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த ஈக்காடு ஊராட்சியில் காய்ச்சல் மற்றும் தொற்று நோய் தடுப்பு சிறப்பு முகாம் நேற்று நடந்தது. இதில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி கலந்து கொண்டு ஈக்காடு பகுதியில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று தூய்மையாக உள்ளதா? எனவும், குடிநீரில் கலந்து உள்ள குளோரின் அளவு? குறித்து ஆய்வு செய்தார்.

அப்போது அங்கிருந்த பொதுமக்களிடம் அவர், ‘‘டெங்கு காய்ச்சலை முழுமையாக ஒழிக்க வீடுகளையும், சுற்றுப்புறங்களையும் தூய்மையாக வைத்துக்கொள்ளவேண்டும்’’ என அறிவுரைகளை வழங்கினார். மேலும் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி கூறியதாவது:–

திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை முற்றிலுமாக தடுக்கும் வகையில் தீவிர கண்காணிப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் 98 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இவர்கள் வீடுகள், கடைகள், ஓட்டல்கள், திருமண மண்டபங்கள் போன்றவற்றை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுரைகளை வழங்கி, இது தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி வருகின்றனர்.

இருப்பினும் சிலர் அரசின் அறிவுரைகளை பின்பற்றாமல் சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரிக்காமல் உள்ளனர். இவ்வாறு வீடு, சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்து கொள்ளாதவர்களுக்கு அபராதம் விதிப்பதுடன், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் எச்சரித்தார்.

மேலும் அவர், நிலவேம்பு கசாயத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளதால் பொதுமக்கள் நிலவேம்பு கசாயத்தை தவறாமல் அருந்த வேண்டும் என கூறினார்.

இந்த ஆய்வின் போது சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ஜெ.பிரபாகரன், திருவள்ளூர் தாசில்தார் தமிழ்ச்செல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தானம் மற்றும் சுகாதார பணியாளர்கள் உடன் இருந்தனர்.


Next Story