உறவினர்கள், ஆதரவாளர்களின் வீடுகளில் ‘ரெய்டு’: சசிகலா அதிர்ச்சி
உறவினர்கள், ஆதரவாளர்களின் வீடுகளில் நடைபெறும் வருமான வரி சோதனையால் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா அதிர்ச்சி அடைந்துள்ளார். தமிழ் பத்திரிகைகளில் வருமானவரி சோதனை பற்றிய செய்திகளை வரி, வரியாக வாசித்து படிக்கிறார்.
பெங்களூரு,
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, தனது உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடுகளில் நடைபெற்று வரும் வருமான வரி சோதனையால் அதிர்ச்சி அடைந்து உள்ளார். வருமான வரி சோதனை பற்றிய விவரங்களை அவர் சிறையில் இருந்தே உன்னிப்பாக கவனித்து வருகிறார்.
வழக்கமாக சிறையில் உள்ள தொலைக்காட்சியில் தமிழ் திரைப்படங்கள் மற்றும் பழைய தமிழ் திரைப்பட பாடல்கள் கேட்டு சிறை வாசத்தை சசிகலா கழிப்பதாக கூறப்படுகிறது. ஆனால், வருமான வரி சோதனை தொடங்கிய நாளில் இருந்து இதுவரை அவர் சிறை தொலைக்காட்சிகளில் தமிழ் செய்தி சேனல்களை வைத்து பார்த்து வருமான வரி சோதனைகளின் நிலவரங்களை அறிந்து வருகிறார். கடந்த 3 நாட்களாக நள்ளிரவு 1 மணி வரை சசிகலா தமிழ் செய்தி சேனல்களில் வரும் வருமானவரி சோதனை பற்றிய செய்திகளை சோகமாக பார்த்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும், அவர் தமிழ் பத்திரிகைகளையும் தொடர்ச்சியாக படித்து வருகிறார். தினமும் சிறை நூலகத்துக்கு செல்லும் அவர் அங்குள்ள தமிழ் செய்தித்தாள்களில் இருக்கும் வருமானவரி சோதனை தொடர்பான செய்திகளை வரி, வரியாக படித்து வருகிறார். இந்த செய்திகளை படித்தபோது அவருடைய முகத்தில், சோக ரேகை படர்ந்திருந்ததாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.Related Tags :
Next Story