மிசோரம் மாநிலத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரர் திடீர் மரணம் குருவிகுளத்தைச் சேர்ந்தவர்


மிசோரம் மாநிலத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரர் திடீர் மரணம் குருவிகுளத்தைச் சேர்ந்தவர்
x
தினத்தந்தி 15 Nov 2017 2:45 AM IST (Updated: 14 Nov 2017 9:01 PM IST)
t-max-icont-min-icon

மிசோரம் மாநிலத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரர் அருள் பிரகாஷ் என்பவர் திடீரென்று மரணம் அடைந்தார்.

திருவேங்கடம்,

மிசோரம் மாநிலத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரர் அருள் பிரகாஷ் என்பவர் திடீரென்று மரணம் அடைந்தார். அவர் நெல்லை மாவட்டம் குருவிகுளத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

எல்லை பாதுகாப்பு படை வீரர்

நெல்லை மாவட்டம் குருவிகுளத்தை சேர்ந்த தங்கச்சாமி மகன் அருள் பிரகாஷ் (வயது 39). இவருக்கு திருமணம் ஆகி ஜெயா என்ற மனைவியும், சஞ்சய், நெஸ்தின் தினோ ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர்.

இவர்கள், குருவிகுளத்துக்கு மேற்கே துர்காநகரில் குடும்பத்துடன் வசித்து வந்தனர். அருள் பிரகாஷ் எல்லை பாதுகாப்பு படையில் சேர்ந்து 14 ஆண்டுகள் ஆகிறது. தற்போது மிசோரம் மாநிலத்தில் பணிபுரிந்து வந்தார்.

திடீர் மரணம்

கடந்த செப்டம்பர் மாதம் அருள் பிரகாஷ் விடுமுறையில் ஊருக்கு வந்து இருந்தார். அதன்பிறகு பணிக்கு சென்ற அவர், நேற்று முன்தினம் மனைவி ஜெயாவிடம் செல்போனில் பேசினார். அப்போது வருகிற வெள்ளிக்கிழமை (17–ந் தேதி) ஊருக்கு வருவதாக கூறியுள்ளார்.

இதற்கிடையே நேற்று காலையில், மிசோரம் மாநிலத்தில் இருந்து ஜெயாவின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய, எல்லை பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர், அருள் பிரகாஷ் இறந்து விட்டதாகவும், அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுகிறது என்றும் கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஜெயா கதறி அழுதார். இந்த தகவல் அறிந்த அருள் பிரகாசின் குடும்பத்தினரும் கதறி அழுதனர்.

மர்ம மரணம்?

அருள் பிரகாஷ் எப்படி இறந்தார்? என்ற விவரம் அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்படவில்லை. இதனால் அருள் பிரகாசின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவருடைய மனைவி மற்றும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.


Next Story