கவர்னர், அதிகாரிகளை சந்தித்து இருப்பது ஆரோக்கியமான வி‌ஷயம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி


கவர்னர், அதிகாரிகளை சந்தித்து இருப்பது ஆரோக்கியமான வி‌ஷயம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி
x
தினத்தந்தி 15 Nov 2017 4:15 AM IST (Updated: 15 Nov 2017 1:26 AM IST)
t-max-icont-min-icon

கவர்னர், அதிகாரிகளை சந்தித்து இருப்பது ஆரோக்கியமான வி‌ஷயம்தான். இதனால் மத்திய அரசின் திட்டங்கள் அதிகம் கிடைக்கும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

கோவை,

கோவையில் அரசு அதிகாரிகளுடன் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று ஆலோசனை நடத்தினார். இதை தொடர்ந்து மாலையில் கோவை மாவட்டத்தில் உள்ள அரசியல் கட்சி பிரமுகர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள், சமூக ஆர்வலர்கள் கவர்னரை சந்தித்தனர். பின்னர் அவர்களுடன் கவர்னர் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அ.தி.மு.க. மேல்சபை எம்.பி. எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்து வெளியே வந்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:–

கவர்னர் நமது மாவட்டத்துக்கு வந்து இருக்கிறார். கோவை விமான நிலையத்தில் நான் அவருக்கு வரவேற்பு அளித்தேன். பின்னர் அவர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். கவர்னர் நமது மாவட்டத்துக்கு வந்தது நமக்கு பெருமைதான். இங்குள்ள அதிகாரிகளை சந்தித்து அவர் பேசியதில் எவ்வித தவறும் இல்லை. அது ஆரோக்கியமான வி‌ஷயம்தான்.

எனக்கு சில வேலைகள் இருந்ததால் அந்த ஆலோசனையில் பங்கேற்ற முடியவில்லை. தமிழக கவர்னருக்கும், தமிழக முதல்–அமைச்சருக்கும் இடையே எவ்வித பிரச்சினையும் இல்லை. கவர்னர் உயர் அதிகாரிகளை சந்தித்து மத்திய–மாநில அரசுகளின் திட்டங்கள் குறித்துதான் பேசி உள்ளார். அரசு திட்டங்கள் அனைத்தும் வேகமாக நடக்க வேண்டும் என்று தான் அவர் அறிவுரை வழங்கி உள்ளார்.

தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். கவர்னர் கோவைக்கு வருவதால், நீங்கள் உடனடியாக கோவைக்கு செல்லுங்கள் என்று என்னை முதல்–அமைச்சர் இங்கு அனுப்பி வைத்தார்.

நமக்கு நல்ல கவர்னர் கிடைத்து உள்ளார். அவர் மாவட்டத்தில் உள்ள உயர் அதிகாரிகளை அழைத்து வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்துவதால், மத்திய அரசின் திட்டங்கள் அதிகமாகதான் வரும். இதுபோன்று கவர்னர் ஆலோசனை நடத்துவது தவறு இல்லை. அது மாநில சுயாட்சி உரிமையை எவ்விதத்திலும் பாதிக்காது.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

அ.தி.மு.க. எம்.பி. எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:–

எந்த கவர்னரும் இதுபோன்று அதிகாரிகளை அழைத்து பேசியது இல்லை என்று கூறுவது தவறு. உதாரணமாக கவர்னராக இருந்த மோகன்லால் சுக்காரியா எந்த ஊருக்கு சென்றாலும் அதிகாரிகளை சந்தித்து பேசுவார். அதுபோன்று அதிகாரிகளை தனிப்பட்ட முறையில் அழைத்து ஆலோசனை நடத்துவார்.

தமிழக அரசில் பா.ஜனதா குறுக்கீடு இல்லை. அரசு செயல்படுவதற்கு அவர்கள் தடையாகவும் இருக்கவில்லை. கவர்னர் என்ன பேசினார் என்று தெரியாமல் தவறாக பேசக்கூடாது. என்னென்ன செய்ய வேண்டும், நான் என்னென்ன செய்வேன் என்று அதிகாரிகளிடம் உறுதியளித்துள்ளார்.

கவர்னர் பதவி ஏற்றதும் அரசியல் சட்டத்துக்கு உட்பட்டுதான் நான் செயல்படுவேன் என்று கூறினார். அதுபோன்றுதான் அவர் செயல்பட்டு வருகிறார். அவர் ஒருபோதும் எல்லை மீறவில்லை. கோவை மாவட்டத்தில் என்னென்ன பணிகள் நடக்கிறது, என்னென்ன பணிகள் செய்ய வேண்டும் என்று அமைச்சர் விளக்கி கூறினார். அதை அவர் மறுப்பு தெரிவிக்காமல் கேட்டுக்கொண்டார்.

எதிர்ப்பாக இருந்தால் அமைச்சர் கூறியதை அவர் கேட்டு இருக்க மாட்டாரே? எனவே அவர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தியதில் குறை சொல்ல எதுவும் இல்லை. கவர்னர் ஏதாவது அத்துமீறி பேசி இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். நான் அதை எதிர்க்க தயங்கமாட்டேன்.

நமது கவர்னர் வடகிழக்கு மாநிலத்தில் இருந்தபோது அவர் அதிகாரிகளை சந்தித்து பேசுவது வழக்கம். அதுபோன்றுதான் இங்கும் பேசி உள்ளார். இந்த கூட்டத்தில் அவர் அதிகமாக ஆர்வம் காட்டியது நல்வாழ்வுத்துறை செயல்பாடுகள் எப்படி இருக்கிறது? குணப்படுத்த வியாதிகள் அதிகமாக இருக்கிறதா? என்பதை குறித்துதான். இதில் எவ்வித தவறும் இல்லை.இது ஆரோக்கியமான வி‌ஷயம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story