கோவை அருகே டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவர் பலி பொதுமக்கள் சாலைமறியல்
கோவை அருகே டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவர் பலியானார். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அரசு பஸ்சை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அன்னூர்,
கோவை மாவட்டம் அன்னூர் அருகே மூக்கனூரை சேர்ந்தவர் குணசேகரன். அவரது மகன் சுதர்சன் (வயது 14). ஆனையூரில் உள்ள அரசு பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த சுதர்சனை, பெற்றோர் அன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். எனினும் காய்ச்சல் குணமாகவில்லை. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு ரத்த பரிசோதனை செய்தபோது, சுதர்சனுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அதே மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் சுதர்சன் பரிதாபமாக உயிரிழந்தார்.
டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர். திடீரென்று ஒன்று திரண்ட அவர்கள் நேற்று காலை 10 மணியளவில் முக்கனூரில், மேட்டுப்பாளையத்தில் இருந்து வந்த அரசு பஸ்சை சிறைபிடித்து சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க சுகாதார பணிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும், உயிரிழந்த மாணவனின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கைகள் விடுக்கப்பட்டது. மறியல் காரணமாக அந்த வழியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த அன்னூர் போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, பஸ்சை விடுவித்துவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
அதைத்தொடர்ந்து அன்னூர் தாசில்தார் ராஜன், போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் இளவரசு, விஜயராணி ஆகியோர் டெங்கு காய்ச்சலுக்கு பலியான மாணவனின் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்கள். டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.