ஈரோட்டில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் விபரீத முடிவு
ஈரோட்டில் குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு,
ஈரோடு சூளை பாரதிநகரை சேர்ந்தவர் அமுல்தாஸ். இவருடைய மகன் ரிச்சார்டு (வயது 28). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சியாமளா. இவர்களுக்கு கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ரிச்சார்டுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி அவர் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வருவார். அப்போது கணவன்–மனைவிக்கு இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ரிச்சார்டு சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். மேலும், நேற்று முன்தினம் இரவு ரிச்சார்டு மது அருந்திவிட்டு வீட்டிற்கு சென்று உள்ளார். அப்போது அவருடைய மனைவி, ‘குடிப்பழக்கத்தை விட்டுவிட்டு வேலைக்கு செல்ல வேண்டியதுதானே’ என்று கண்டித்தாக தெரிகிறது. இதில் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அதன்பின்னர் 2 பேரும் தூங்க சென்றுவிட்டனர்.
மனைவி கண்டித்ததால் ரிச்சார்டு மனமுடைந்து நேற்று காலை வீட்டில் தூக்குப்போட்டு தொங்கினார். இதை பார்த்த சியாமளா அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டு கதறி அழுதார். உடனே அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ரிச்சார்டை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ரிச்சார்டு இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.