அடிப்படை வசதிகள் உள்ளதா? நெல்லிக்குப்பம் நகராட்சி மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு
அடிப்படை வசதிகள் உள்ளதா? என்று நெல்லிக்குப்பம் நகராட்சி மருத்துவமனையில் கலெக்டர் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
நெல்லிக்குப்பம்,
நெல்லிக்குப்பத்தில் நகராட்சி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு நேற்று காலை கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே திடீரென வந்தார். பின்னர் டாக்டர்கள், நர்சுகள் அனைவரும் பணிக்கு வந்துள்ளனரா? போதுமான இருப்பு மருந்துகள் உள்ளதா? அடிப்படை வசதிகள் உள்ளதா? என அவர் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அங்கிருந்த பொது மக்களிடம், தினந்தோறும் மருத்துவமனை திறக்கப்பட்டு முறையான சிகிச்சை அளிக்கப்படுகிறதா? என கேட்டறிந்தார். அப்போது பொதுமக்கள், இரவு நேரத்தில் இந்த மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லை. மேலும் இங்குள்ள ஸ்கேன் மையத்தில் நர்சு பணியிடம் காலியாக உள்ளது. கழிவறை வசதி இல்லை என்று கோரிக்கைகளை முன் வைத்தனர்.
இதைகேட்ட கலெக்டர், இரவு நேரத்தில் நர்சுகள் பணியில் இருக்க வேண்டும், ஸ்கேன் எடுக்க நர்சு அல்லது டாக்டரை நியமிக்க வேண்டும் என்று சுகாதார பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ஜவகர்லாலுக்கு உத்தரவிட்டார்.
மேலும், மருத்துவமனையில் கழிப்பறை வசதிக்கு உரிய நிதியை ஒதுக்கி உடனடியாக கழிப்பறை கட்டிடம் நடவடிக்கை எடுக்குமாறு நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) மகாராஜனுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
அதன்பிறகு பொது மக்களிடம் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று கூறிய கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.