மாநிலத்தின் உரிமைக்காக நீதிமன்ற கதவை தட்டுவோம் நாராயணசாமி தகவல்
புதுவை மாநிலத்தின் உரிமைக்காக நீதிமன்ற கதவை தட்டுவோம் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி,
புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேற்று ஜவகர்லால் நேருவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் தலைமை தாங்கினார். விழாவில் கலந்துகொண்டு நேருவின் உருவப்படத்துக்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அவர் பேசியதாவது:–
மத்தியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி குறைந்துவிட்டது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் கருப்பு பணம் ஒழிந்துவிட்டதா? நமது மாநில வருவாயில் 30 சதவீதம் குறைந்துவிட்டது. இதனால் மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை.
எதிர்க்கட்சியினரை பழிவாங்கும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியுள்ளது. மக்கள்நல திட்டங்களுக்காகக்கூட நிதி தர மறுக்கின்றனர். நான் 20 முறை மத்திய நிதி மந்திரியை சந்தித்துள்ளேன். திட்டமில்லா செலவினங்களுக்கு 5 ஆண்டுகளாக தொடர்ந்து வழங்கப்பட்டு வரும் ரூ.527 கோடியை உயர்த்தி தர வலியுறுத்தி உள்ளேன்.
மத்தியில் ஆட்சி செய்பவர்கள் பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களை புறக்கணித்து வருகிறார்கள். அதிகாரவர்க்கத்தின் மூலம் மாநில வளர்ச்சியை முடக்க நினைக்கிறார்கள். அவர்களது இந்த திட்டம் பலிக்காது. விரைவில் பல மாநிலங்களில் தேர்தல் வர உள்ளது. பாரதீய ஜனதா கட்சியின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்து வருகிறார்கள். எதிர்க்கட்சிகளை மிரட்ட வருமான வரி சோதனை, சி.பி.ஐ. விசாரணை என தொடர்கிறது.
டெல்லியில் கவர்னரின் அதிகாரம் குறித்து தொடரப்பட்ட வழக்கில் அரசின் அன்றாட பணிகளில் கவர்னர் தலையிடக்கூடாது என்று கோர்ட்டு கூறியுள்ளது. இதைப்பார்த்தாவது இங்கிருப்பவர்கள் (கவர்னர்) திருந்துவதாக தெரியவில்லை.
வேறு யாரும் தவறு செய்யக்கூடாது என்பவர்கள் தொடர்ந்து தவறுகளை செய்கிறார்கள். பிற துறைகளை சேர்ந்த 64 ஊழியர்களை தங்களுக்கு பணி செய்ய வைத்துள்ளனர். முதலில் தான் சுத்தமாக இருக்கவேண்டும். மாநிலத்தின் உரிமை தொடர்பாக மத்திய அரசின் கதவினை பலமுறை தட்டிப்பார்த்துவிட்டோம். ஆனால் எதுவும் நடக்கவில்லை. எனவே அடுத்ததாக நீதிமன்றத்தின் கதவை தட்டுவோம். அதில் உரிய நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறோம்.
இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசினார்.
விழாவில் அமைச்சர்கள் மல்லாடிகிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ., முன்னாள் முதல்–அமைச்சர் ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர் வல்சராஜ், காங்கிரஸ் நிர்வாகிகள் வினாயகமூர்த்தி, தேவதாஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.