பிரபல தாதா தட்டாஞ்சாவடி செந்திலை காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி
புதுவை லாஸ்பேட்டை செல்லப்பெருமாள்பேட்டையை சேர்ந்த ரவுடி முரளி. இவர் கடந்த பிப்ரவரி மாதம் 15–ந்தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார்.
புதுச்சேரி,
புதுவை லாஸ்பேட்டை செல்லப்பெருமாள்பேட்டையை சேர்ந்த ரவுடி முரளி. இவர் கடந்த பிப்ரவரி மாதம் 15–ந்தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த பிரபல தாதா தட்டாஞ்சாவடி செந்திலை கோரிமேடு போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் கைது செய்தனர். பின்னர் அவரை புதுவை கொண்டு வந்து காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே புதுவை வழுதாவூர் சாலையில் இருந்த தனக்கு சொந்தமான இடத்தை தட்டாஞ்சாவடி செந்தில் மனைகளாக பிரித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விற்றுவிட்டார். மீண்டும் அந்த இடத்தை தன்னிடமே தந்து விடுமாறு மனைகளை வாங்கியவர்களிடம் தட்டாஞ்சாவடி செந்தில் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுபற்றி கோரிமேடு போலீஸ் நிலையத்தில் ஓய்வு பெற்ற டி.எஸ்.பி. ரத்தினவேலு புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் தற்போது காலாப்பட்டு சிறையில் உள்ள தட்டாஞ்சாவடி செந்திலை இந்த வழக்கு தொடர்பாக காவலில் எடுத்து விசாரணை நடத்த புதுவை கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. அதனை தொடர்ந்து தட்டாஞ்சாவடி செந்திலை ஒரு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியது. அதைத்தொடர்ந்து அவரை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இன்று (புதன்கிழமை) மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைக்க உள்ளனர்.